Today is Saturday 2021 Dec 04

"தன்னை இனி தல என்று அழைக்க வேண்டாம்" என்று ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக விஜய், அஜித் உள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு நடிகரின் பெயருக்கு முன்பும் ஒரு அடைமொழி வைத்து கூப்பிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய்க்கு இளைய தளபதி என்றும் அஜித்திற்கு ஆசை நாயகன், அல்டிமேட் ஸ்டார் என்றும் அடைமொழி உண்டு. இவற்றையெல்லாம் கடந்து ரசிகர்கள் அவருக்கு செல்லமாக வைத்த `தல' என்ற அடைமொழி தான் இன்றளவும் மனதில் நிலைத்து நின்றது. நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகை சேர்ந்த பலரும் செல்லமாக தல என்றே கூப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு வணக்கம். இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது.

தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

 

 

``ஜெய் பீம்’ படம் பார்த்தேன் கண்கள் குளமானது” என்று தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கும் ’ஜெய் பீம்’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய ஒரு வழக்கினையே அடிப்படையாகக் கொண்டு ‘ஜெய் பீம்’ படத்தினை எடுத்திருக்கிறார்கள்.

இன்று வெளியாகியுள்ள படத்தை படக்குழுவினருடன் பார்த்தார் நடிகர் கமல்ஹாசன், படம் பார்த்த பின்னர் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். “ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா மற்றும் ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.


சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி-2021 இம்மாதம் உகாண்டா நாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில் தமிழக வீரர்கள் 9 பேர் இடம் பெற்றனர். இந்தப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் மட்டும் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகள் ருத்திக், தினகரன், சிவராஜன், கரண், அமுதா, சந்தியா, பிரேம் குமார், சீனிவாசன் நீரஜ், போட்டிகளில் பங்கேற்ற வீரர் தினேஷ், பயிற்சியாளர்கள் பத்ரிநாராயணன், இர்பான் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி்வ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினர் செயலர் டாக்டர் ஆனந்தகுமார், பாரா பாட்மிண்டன் சங்கத் தலைவர் அசோக், துணைத் தலைவர் சத்யநாராயணன், துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

சையது முஸ்தாக் அலி டி20 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சையது முஸ்தாக் அலி என்னும் மாநில அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் விஜய் சங்கர் தலைமயிலான தமிழ்நாடு அணியும், மனீஸ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் நுழைந்தன.

நேற்று (22-ம் தேதி) நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை விட்டுக் கொடுத்து 153 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று, தொடரை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது. இறுதிப் பந்தில் வெற்றி பெறத் தேவையான ரன்களைச் சேர்த்த தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!" என தெரிவித்துள்ளார்.

கனமழையின் காரணமாக தலைமைச் செயலகத்தில் வேரோடு பெரிய மரம் சாய்ந்தது. இதில் பெண் காவலர் ஒருவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.

சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் கனமழையாக கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்னையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, விழுந்ததில் பெண் காவலர் கவிதா தலை நசுங்கி பலியானார். வாகனங்கள் நிறுத்தம் இடத்தில் நின்ற பெரிய மரம், முறிந்து விழுந்ததில் சில காவலர்களும் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கார்களும் சேதமடைந்தது.

தகவல் அறிந்து தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர். இதனிடையே, உயிரிழந்த காவலர் கவிதாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும் கவிதாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, கொடைக்கானலிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுறை அளிக்கப்பட்டுள்ளது.

post-slider

ஜாவத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் தாக்கத்தால் வட கடலோர ஆந்திராவின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்டங்களும், ஒடிசாவின் கஜபதி, கஞ்சம், பூரி, நாயகர், குர்தா, கட்டாக், ஜகத்சிங்பூர் மற்றும் கேந்திரபாரா மாவட்டங்களும் அதிகம் பாதிக்கப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜாவத் புயல் காரணமாக 7 முக்கிய விரைவு ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்:

* சென்னை சென்ட்ரல் - ஹவுரா அதிவேக விரைவு ரயில் (12840 ) இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

* தாம்பரம் - ஜஸிதிஹ் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (12375 ) இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

* ஹவுரா - சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் (12339 ) சேவையும் புயல் காரணமாக இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

* விழுப்புரம் - புருலியா வாரம் இருமுறை விரைவு ரயில் (22606) சேவையும் இன்று ரத்து செய்யப்படுகிறது.

நாளை 2 விரைவு ரயில்கள் ரத்து:

* சென்னை சென்ட்ரல் - ஹவுரா கொரமண்டல் விரைவு ரயில் (12842 ) நாளை ரத்து செய்யப்படுகிறது.

* புரி - சென்னை சென்ட்ரல் வாராந்திர அதிவேக விரைவு ரயில் (22859) நாளை ரத்து செய்யப்படுகிறது.

போரூர் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனையடுத்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அளவுக்கு அதிகமாக பெய்ததன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு குடியிருப்புகள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு போர்கால நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வெள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறக்குறைய 90 சதவீதம் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டுவிட்டன. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைநீர் பாதிப்பு இருந்து வருகிறது. அப்பகுதிகளிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போரூர் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்குள்ள பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மழைநீர் செல்லக்கூடிய வரைபடங்களை காண்பித்து முதலமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். போரூர் ஏரியை பொறுத்தவை கடந்த ஆட்சி காலத்தில் முறையாக கால்வாய்கள் சீரமைக்கப்படவில்லை. கனமழை அதிகம் பொழிந்து போரூர் ஏரி நிரம்பிவிட்டால் இங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையிலேயே முதலமைச்சர் அப்பகுதியில் ஆய்வு செய்து செய்தார். அதனை தொடர்ந்து அருகே உள்ள மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்பை ஆய்வு செய்த பின்னர், அருகே இருக்கக்கூடிய தனலட்சுமி நகரில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 
 

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்கள் பலரும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ரஜினிகாந்த், கமலிடம் தொலைபேசியில் பேசி, அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

கடந்த வாரம் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து முற்றிலுமாக குணமடைந்து விட்டதாகவும், எனினும் சில நாட்களுக்குத் தனிமையில் இருப்பார் என்றும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இன்று கமல்ஹாசன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளார்.

"முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன்'' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

டாஸ்மாக் விற்பனைக் கடைகளுக்கான நேர மாற்றத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனப் பொதுச் செயலாளர் திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்படும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என இருப்பதைப் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என மாற்றியமைக்க வேண்டும் என்ற டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரின் வேண்டுகோளை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஏற்றுக்கொண்ட அடிப்படையில், பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணிவரை கடைகளும், மதுக்கூடங்களும் செயல்பட வேண்டுமென இன்று அவசரகதியில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ள நிலையில் முதல்வர் டிசம்பர் 15 வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளதையும், மேலாண்மை இயக்குநர் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமலும், ஒமைக்ரான் என்கிற உருமாறிய கரோனா நோய்த்தொற்று ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமலும் மதுபானக் கடைகளின் செயல்படும் நேரத்தை மாற்றியமைத்தற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தற்போது நடைமுறையில் உள்ள கடைகளின் விற்பனை நேரமானது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையாக இருக்கும்போதே சமூக விரோதிகளால் ஊழியர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதுமான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும்போது கணக்கு முடிக்க மேலும் 1 மணி நேரம் கூடுதலாகக் கடையில் இருக்க வேண்டிய ஊழியர்கள் வீடு திரும்ப பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையையும், சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிக்கும் ஆபத்தையும் டாஸ்மாக் நிர்வாகமும், அரசும் உணராமல் நேரத்தை நீட்டித்துள்ளன.

டிசம்பர் 15 வரை கட்டுப்பாடுகள் நீடிப்பதாக அறிவித்துள்ள முதல்வரின் அறிக்கையில், செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி கடைகளின் நுழைவுவாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். கடைகளில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக் கூடாது. கடைகளின் நுழைவு வாயிலில் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும்போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவை டாஸ்மாக் கடைகளில் அமல்படுத்துவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் முனைப்பு காட்டவில்லை.

கரோனா இரண்டாம் அலையின்போது நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியும், 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதையும் டாஸ்மாக் நிர்வாகமும், அரசும் போதிய அக்கறை செலுத்தவில்லை. முந்தைய ஆட்சிக் காலத்திலாவது வாடிக்கையாளர்கள் வரிசையில் வருவதற்கான தடுப்புகள் அமைத்தும், கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை என்பன உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு புதிய அரசு பொறுப்பேற்றவுடன் பாதுகாப்பு உபகரணங்களை டாஸ்மாக் நிர்வாகம் வழங்கவில்லை என்பதை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

டாஸ்மாக் கடைகளின் செயல்படும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்கு வந்தது என்பதையும், நிர்வாகத்திற்கும், அரசுக்கும் என்ன லாபம் வந்துவிடும் என்பதை மேலாண்மை இயக்குநர் வெளிப்படுத்திட வேண்டும். இதனால் பாதிக்கப்படப்போவது கடை ஊழியர்கள்தான். இதுபோன்ற நிர்வாக நடவடிக்கைகளில் மாற்றத்தை உருவாக்கும்போது ஊழியர்கள் தரப்பு கருத்துகளை, ஆலோசனைகளைப் பெறுவதற்கு தொழிற்சங்கங்களின் கூட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.

முதல்வர் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக் குறைப்பு நடவடிக்கையிலும், மழை வெள்ள பாதிப்பு நிவாரண உதவி நடவடிக்கையிலும் ஈடுபட்டு வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை மாற்றி அமைக்கும் அரசின் நடவடிக்கையானது ஊழியர்கள் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரின் தன்னிச்சையான அணுகுமுறை அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் என்பதையும், ஊழியர்களுக்கு ஏற்பக்கூடிய சிரமங்களையும் முதல்வர் கவனத்தில் எடுத்துகொண்டு மேலாண்மை இயக்குநரின் உத்தரவைத் திரும்ப பெற்று நடைமுறையில் உள்ள நேரமான காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை என்பதைத் தொடர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருதை தமிழகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

டெல்லியில் இன்று ஒன்றிய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற 2020 -ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் உரிமை ஏற்றத்திற்கான தேசிய விருது வழங்கும் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சமூகநலம் -மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார்.

இவ்விழாவில் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை வழங்கியமைக்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு விருதினை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கிட. சமூகநலம் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் சமூகநலம் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் தெரிவிக்கையில், "ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் திங்கள் 3-ம் நாள் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேற்படி தினத்தன்று மாற்றுத் திறனாளிகள் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இந்நாளில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் தனித்துவ திறமைகளை வெளிப்படுத்திட மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதுடன் மாற்றுத் திறனாளிகளில் சிறந்த நபர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக சிறந்த சேவை வழங்கியவர்களுக்கு மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் 2020 -ம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமையேற்றத்திற்கான தேசிய விருதுகள் தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதன்படி சிறந்த பணியாளர் - சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் விருது சென்னை மாவட்டம் வேளச்சேரியை சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை காஞ்சிபுரம் மாவட்டம் கானாத்தூர் ரெட்டிக்குப்பம் சேர்ந்த தினேஷ் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சேர்ந்த மானக்ஷ தண்டபாணி ஆகியோருக்கும் சிறந்த சான்றாளர் -முன்னுதாரணம் சென்னை மாவட்டம் மந்தவெளி சேர்ந்த ஜோதி, நாமக்கல் மாவட்டம் மோகனுர் பேட்டப்பாளையம் பிரபாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

மேற்காணும் விருதுகளுடன் இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமையேற்றத்தினை ஊக்குவிப்பதில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடும் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகளை வழங்குவதில் சிறந்த மாவட்டமாக சேலம் மாவட்டமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.