`அண்ணாத்த' திரைப்பட மோஷன் போஸ்டர் வெளியீட்டின் போது ஆட்டை பலியிட்டு அபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள் மீதும், அதை கண்டிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 10ம் தேதி நடிகர் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை கொண்டாடும் விதமாக ரஜினி கட் அவுட்டிற்கு ரஜினி ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து அதன் ரத்தத்தினால் அபிஷேகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையானது.

இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக வழக்கறிஞர் தமிழ் வேந்தன் மற்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் ரஜினி ரசிகர்களின் செயல் ஆயுத கலாசாரத்திற்கு வழி வகுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இந்த செயலிற்கு நடிகர் ரஜினி தரப்பில் எந்த வித கண்டன அறிக்கையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் அபிஷேகம் செய்த நபர்கள் மீதும், ரசிகர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்காத நடிகர் ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.

``கடந்த 10 வருடங்களில் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தனர். ஆனால் தான் அதில் இருந்து தப்பித்து விட்டேன்'' என்று நகைசுவை நடிகர் விவேக் கூறினார்.

நடிகர் வடிவேலு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் குறித்து சென்னை தியாகராய நகரில் நடிகர் வடிவேலு மற்றும் இயக்குநர் சுபாஷ்கரன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய நடிகர் வடிவேலு, கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்ததை எண்ணி தனது மனதை தேற்றிக் கொண்டேன். தனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்தபிறகு தன் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. முன்பு நடித்ததை விட இனி பிரமாண்டமாக நடிப்பேன். புதிதாக நடிக்கும் திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளேன்.

விவேக் என் அருமையான நண்பன், அவரது மறைவு பெரும் வேதனையை தந்தது. அவர் இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. கடந்த 10 வருடங்களில் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் கண்ணிவெடி வைத்தனர். ஆனால் தான் அதில் இருந்து தப்பித்து விட்டேன். தனக்கு எண்டே (end) கிடையாது. தன்னைப் பற்றி தயாரிப்பாளர் ஷங்கர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய். இனிமேல் அந்த ஏரியா பக்கமே போக மாட்டேன்" என்று கூறினார்.

கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்யோவில் இன்று தொடங்குகிறது. மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்யோவில் இன்று முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியை போல் பாராலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டோக்கயோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்திய அணிக்கு தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த உடன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக தேக் சந்த் ஏந்துவாா் என கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து வினோத் குமார் (வட்டு எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கின்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் சதத்தால் இந்திய அணி முதல் இன் னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பேட்டிங்கை தொடங்கிய கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களும் கே.எல்.ராகுல் 129 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 42 ரன்களும் கடைசியில் அதிரடி காட்டிய ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். 29 ஓவர்களில் 7 மெய்டனுடன் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்ப்பது அவருக்கு 31-வது முறை. ஆண்டர்சனின் வயது 39. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் (49 ரன்), விக்கெட்டை முகமது ஷமியும் டோம் சிப்லே (11ரன்), ஹசீப் ஹமீத் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை முகமது சிராஜும் வீழ்த்தினர்.

இதையடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட்டும் (48 ரன்), பேர்ஸ்டோவும் (6 ரன்) களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கோடநாடு பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அங்கிருக்கக்கூடிய பங்களாவில் 11 பேர் கொண்ட குழு உள்ளே நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதுடன் அன்று இரவு காவலாளி ஓம்பகதூர் என்பவரையும் கொலை செய்தனர். இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாகவே உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த வழக்கில் பல்வேறு மர்மங்களும், சந்தேகங்களும் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.

முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயான் இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சஜீவன், அவரது சகோதரர் சுஷில் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணையில் கூடுதல் தகவல் கிடைத்திருப்பதாக கூறி கடந்த மாதம் 13ம் தேதி கோத்தகிரி காவல்துறையில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதன் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாவட்ட நிர்வாகம், கூடுதல் விசாரணையை மேற்கொள்ளலாம். எந்தவித தடையும் இல்லை என்று உத்தரவிட்டது. தொடர்ந்து முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் கடந்த மாதம் 16ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

அதேபோல முன்னாள் கார் ஓட்டுர் கனகராஜின் சகோதரர் தனிப்பாலிடமும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்மன் அனுப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட கனகராஜ், சயான், வாழையாறு மனோஜ் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்டதால் வாழையாறு மனோஜ் , சயான் ஆகியோர் மேட்டுப்பாளையம் வழியாக கோவை சென்ற நிலையில் மற்ற 8 பேர் கூடலூர் வழியாக சென்றனர். கூடலூர் பகுதியில் தடுத்து நிறுத்தி காவலில் இருந்த அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்க தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த தடையில்லை என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது தனிப்படை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படும் நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

post-slider

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்து 60,158 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நேற்று பங்குச் சந்தை முடிவின்போதே சென்செக்ஸ் 59,885 புள்ளிகளில் இருந்தது. மேலும், நிப்டி 17,883 புள்ளிகளில் இருந்தது. இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டும் என முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

எதிர்பார்த்ததை போலவே இன்று சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. தற்சமயம் சென்செக்ஸ் 60,214.68 புள்ளிகளாக உள்ளது. நிப்டி தற்போது 17,900 புள்ளிகளுக்கு மேல் உள்ளது.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்டிஎல் டெக், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டெக் மகிந்த்ரா ஆகிய பங்குகள் அதிகபட்சமாக முன்னேறியுள்ளன. டாடா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி, மகிந்த்ரா ஆகிய பங்குகள் சரிந்துள்ளன.

அமெரிக்க ஃபிடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நேற்று அமெரிக்க மார்க்கெட்டுகள் 1 விழுக்காடுக்கு மேல் உயர்ந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.

இதுபோக, கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதும், தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், அன்லாக் மனநிலை உருவாகியுள்ளதும் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான அமளியில் ஈடுபட்டன.

இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஒன்றிய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுங்கள் என 2 முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டும் ஒன்றிய அரசு அதனை செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ளது மியபுரா கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரின் 2 வயது குழந்தைக்கு கடந்த 4ம் தேதி பிறந்த நாள் . இதையடுத்து அருகில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று வழிபட்டனர் பெற்றோர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ல அந்த கிராமத்தினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து கோயிலின் வெளியே நின்று அவர்கள் வழிபட்டனர்.

அப்போது. குழந்தை திடீரென கோயிலுக்குள் ஓடி, சாமி கும்பிவிட்டு திரும்பியது. இதைக் கண்ட அந்தப் பகுதியினர் பட்டியலின குழந்தை எப்படி கோயிலுக்குள் செல்லலாம்? என பிரச்னையாக்கினர். இதையடுத்து அந்த கிராமத்தினர் கூடி பேசி, கோயிலுக்குள் குழந்தை சென்றதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்கான பூஜைக்காக இந்த தொகையை அபராதமாக விதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மியபுரா கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி கோப்பல் நகர போலீஸ் எஸ்.பி டி.ஸ்ரீதர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தோம். மக்களுக்கு அறிவுரை செய்தோம். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டனர்" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது காரில் பயங்கர வெடி பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது காரிலிருந்து அலாரம் அடித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் தனது காரில் உள்ள ரிமோட் மூலம் காரை லாக் செய்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. மீண்டும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக ஊர் முழுவதும் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.

பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை சட்டவிரோதமாக காரில் ஏற்றி வந்தது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் பலர் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,369 ஆக இருந்தது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,371 ரூபாயாக இருந்தது. அதேபோல, 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் குறைந்து 34,968 ரூபாய்க்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.