Today is Saturday 2023 Apr 01
இராணிப்பேட்டை
துப்பாக்கி சூடு... பெண்கள் படுகாயம்... 25 பவுன் நகைகள் திருட்டு!- தீரன் பட பாணியில் அரக்கோணம் அருகே நடந்த பயங்கரம்

அரக்கோணம் அருகே தீரன் பட பாணியில் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் செய்யூர் கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்கரன். நள்ளிரவு 12 மணியளவில், புஷ்கரனின் வீட்டுக் கதவை வேகமாக மர்ம நபர்கள் தட்டியிருக்கிறார்கள். என்னவோ ஏதோவென பதறிப் போய், புஷ்கரன் வீட்டுக்கதவை திறந்ததும், பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் வெளியே நின்றுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த புஷ்கரன் உடனே வீட்டின் கதவை மூடியுள்ளார். எனினும், வெளியிலிருந்த கும்பல் வீச்சரிவாளால், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தது. புஷ்கரன் உள்பட வீட்டில் இருந்த நான்கு பேரையும் வீச்சரிவாளால் வெட்டியதுடன் நாட்டுத் துப்பாக்கியாலும் சுட்டுள்ளனர். இதில் நால்வரும் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து, பெண்கள் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் பீரோவிலிருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் நகைகளையும், 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்ட போலீசார், கொள்ளையர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். தீரன் பட பாணியில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: December 18, 2021
அரக்கோணம், கொள்ளை, தீரன் படம், Arakkonam, Robbery, கூheeran movie
ரூ.1,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு!- அமைச்சர் சேகர் பாபு தகவல்

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ரூ.1,600 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள பெரியமலை மீது அருள்மிகு அமிர்தவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோயிலுக்கு மலையில் உள்ள 1,305 படிக்கட்டுகளில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது, ரோப் கார் வசதி அமையும் இடத்தில் பக்தர்களின் வசதிக்காக முதல் கட்டமாக ரூ.11 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு. இந்த நிகழ்ச்சிக்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம் முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் புதிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினர். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு பேசும்போது, ‘‘கடந்த காலங்களில் ஒரு சம்பிரதாயத்திற்காக இருந்த இந்து சமய அறநிலையத்துறையை முதல்வர் ஸ்டாலின் மாற்றியமைத்துள்ளார். கடந்த 7 மாதங்களில் 551 கோயில் திருப்பணிகளுக்கு உத்தரவிட்டதுடன் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும் துறையாக மாற்றியுள்ளார். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இதுவரை ரூ.1,600 கோடி மதிப்புள்ள இறைவனின் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 47 கோயில்களின் வளர்ச்சிக்காக ஒரு வரைவு திட்டத்தை தயாரிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோயில்கள் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சியை முதல்வர் ஸ்டாலின் 5 ஆண்டுகளுக்குள் செய்வார். மன்னர்கள் ஆண்ட காலத்துக்குப் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று வரலாற்றில் நிச்சயம் உருவாக்கப்படும். சோளிங்கர் சின்னமலையில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் குடமுழுக்கு விழா கடைசியாக 1967-ம் ஆண்டு நடத்தப்பட்டுள்ளது. விரைவில் முதல்வரின் அனுமதியுடன் சின்னமலை ஆஞ்சநேயர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்தப்படும்’’ என்று கூறினார்.

பதிவு: December 13, 2021
கோயில், சேகர்பாபு, தமிழ்நாடு, Kovil, Tamilnadu, Sekarbabu
பாலாற்றில் திடீர் வெள்ளம்... அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு... நண்பர்கள் கண்ணீர்

நண்பர்களுடன் பாலாற்றில் குளிக்கும் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை 15 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாப்பேட்டை அடுத்த ஜெ.ஜெ.நகர் குடியிருப்பை சேர்ந்த இளைஞர் சதீஷ் (30). இவர் தனது நண்பர்களுடன் வாலாஜாபேட்டை அணைக்கட்டு பகுதியில் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளார். நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் வெள்ளத்தில் சதீஷ் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 15 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை 1 கிமீ தூரத்திலுள்ள திருமலைச்சேரி என்ற கிராமத்தில் சடலமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து நண்பர்கள் கண்ணீர் வடித்தனர்.

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: September 28, 2021
பாலாறு, இளைஞர் மரணம், வாலாஜாப்பேட்டை, Palaru, Youth Death, Walajapet
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்