Today is Saturday 2023 Apr 01
இராமநாதபுரம்
`நாட்டுக்காக சகலத்தையும் துறந்தவர்!'- முத்துராமலிங்க தேவருக்கு முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

நாட்டுக்காக சகலத்தையும் துறந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்று புகழாரம் சூட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 114-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் நாளை மரியாதை செலுத்துகிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாள் மற்றும் அவரது 59வது குருபூஜையை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் நாளை காலை 9 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்கலந்து கொண்டு அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதே நாளில் சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் சிலைக்கு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்துச் சிறப்பிக்க உள்ளார்கள்.

தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்ட சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில், 1908 -ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ம் நாள் பிறந்தார். இளம் வயதிலேயே பெற்ற தாயை இழந்து, பின் இசுலாமியத் தாய் ஆயிஷாபீவி அவர்களால் பாலூட்டி சீராட்டி வளர்க்கப்பட்டதன் காரணமாக, இசுலாமிய மக்களின்பால் அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பினை மட்டுமே முடித்திருந்தாலும், அன்னிய நாட்டினால் அடிமைப்பட்டிருந்த அடித்தள மக்களின் அன்றாட வாழ்க்கையே போராட்டமாக இருந்ததைக் கண்ணுற்ற தேவர் பெருமகனார், அம்மக்களின் வாழ்வு மேம்பட தன்னையே அர்ப்பணித்தார்.

1933-ம் ஆண்டு முதன் முறையாக, சாயல்குடியில் விவேகானந்தர் பெயரிலான வாசகசாலையில் எவருமே எதிர்பாராத வகையில், மூன்று மணிநேரம் விவேகானந்தரைப் பற்றி ஆற்றிய சொற்பொழிவே தேவர் பெருமகனாரின் பொதுவாழ்விலே திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பிய பெருமை தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பல மணி நேரம் உரையாற்றிடும் தேவர் திருமகனார் தென்னக அரசியலில் கையிலெடுத்த குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிரான போராட்டமே தேவரின் தனித் தன்மையான அரசியல் நோக்கினை உண்டாக்கியது. 1920 -ம் ஆண்டு அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமலில் இருந்த மிகவும் கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் போராடி அச்சட்டத்தினை அகற்றிய பெருமையும் தேவர் பெருமகனார் அவர்களையேச் சாரும்.

மதுரை அன்னை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குள் ஆதிதிராவிட மக்கள் சென்று வழிபடத் இருந்த தடையினைத் தகர்த்தெறிந்ததைத் தொடர்ந்து, தேவர் பெருமகனாரின் அரசியல் பிரவேசமாக, 1937-ம் ஆண்டு நீதிக்கட்சி சார்பில் நடைபெற்ற மாகாணத் தேர்தலில் மாபெரும் வெற்றி, 1939-ம் ஆண்டு ஜூன் 22 அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திர போஸூடன் இணைந்து செயல்படல், 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி என பல்வேறு உச்சங்களைத் தொட்டவர் தேவர் பெருமகனார்.

பசும்பொன் தேவர் திருமகனார் ஆன்மீகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு ஆகிய முக்கியக் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் இறுதிவரை உறுதியாகப் பின்பற்றியவர். தந்தை பெரியார் அவர்கள் “பசும்பொன் தேவர் தனக்காக எதையும் எதிர்பாராதவர், நாட்டுக்காக சகலத்தையும் துறந்தவர், தனது வீரமிகுப்பேச்சால் எண்ணற்ற தியாகிளையும், விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித்துணிச்சல் பெற்றவர், சுத்தத் தியாகியவர்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார். ‘வங்கத்தில் நேதாஜி; தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ எனத் தலைவர் கருணாநிதியால் போற்றப்பட்டவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு பசும்பொன்னில் அஞ்சலி செலுத்திய பின்னர் தேவர் பெருமகனாரை ‘‘நாட்டு விடுதலைக்காகப் போராடிய தேவர் அவர்கள் தமிழ் மொழி மீது ஆழமான பற்றுக் கொண்டவர். தமிழ் மொழி, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமை, பொதுவாழ்வில் நேர்மை போன்றவற்றிற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் 2007-ம் ஆண்டு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் நுாற்றாண்டு விழாவினை சிறப்புடன் கொண்டாடியது மட்டுமின்றி, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அவர் வாழ்ந்த இல்லம் புணரமைப்பு, நூற்றாண்டு தோரணவாயில், புகைப்படக் கண்காட்சிக் கூடம், அணையாவிளக்கு, புதிய நூலகக் கட்டடம், முளப்பாரி மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் மற்றும் தேவர் பெயரில் அரசு கல்லூரி, இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மதுரையில் மிக உயரமான தேவர் சிலை அமைத்து, தேவர் பெருமகனாருக்கு மேலும் பெருமை சேர்த்தது கழக அரசு என்று குறிப்பிட்டு, இளைஞர்களின் அன்பைப் பெற்ற தேவர் பெருமகனார் புகழ் வாழ்க, வளர்க! அவர் காட்டிய பொது வாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க உறுதி ஏற்போம்” என தெரிவித்துள்ளார்.

பதிவு: October 29, 2021
முத்துராமலிங்க தேவர், முதல்வர் ஸ்டாலின்,Muthuramalinga Thevar, Chief Minister Stalin
மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர்!- பரமக்குடியில் அதிர்ச்சி

மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரமக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நண்டுப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யாவுக்கும் (23) பரமக்குடி அருகே செவ்வூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 4 மாதங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். கவுசல்யா நண்டுபட்டியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 16ம் தேதி கவுசல்யா எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவரது பெற்றோர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு நாள் சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவர்களுக்கு தெரியாமல் திடீரென மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர். அங்கு கவுசல்யா இறந்ததால் போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்துவிட்டனர். இதுபற்றி விஏஓ ஹேமா கொடுத்த புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்தனர். பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கணவரை பிரிந்த கவுசல்யா, வேறு சமூக இளைஞருடன் பழகியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர், மூச்சை பிடித்து இறுக்கி கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தை தென்னரசு (58), தாய் அமிர்தவள்ளி (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பரமக்குடி பகுதியில் நடந்த இந்த ஆணவக்கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: October 19, 2021
மகள் ஆணவக்கொலை, பரமக்குடி, பெற்றோர், Daughter genocide, Paramakudi, parents
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்