உல்லாசமாக இருந்ததை கணவர் பார்த்ததால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்துள்ளார் மனைவி. இந்த அதிர்ச்சி சம்பவம் குறிஞ்சிப்பாடி அருகே நடந்துள்ளது.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டை ஜேஜே நகரை சேர்ந்தவர் மணிவேல் என்பவரின் மகன் முருகன் (38). கட்டிட தொழிலாளியான இவர், தனது அக்கா மகள் வனஜாவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 6ம் தேதி முருகன் மர்மமான முறையில் வீட்டின் அருகே இறந்து கிடந்தார். அவர் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உடலை மனைவி வனஜா மற்றும் உறவினர்கள் அடக்கம் செய்ய முயன்றனர். நன்றாக இருந்த ஒருவர் திடீரென இறந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் குறிஞ்சிப்பாடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து போலீசார் வந்து முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து வனஜாவிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமாரும் முருகனும் நண்பர்கள். ஒன்றாக சேர்ந்து கட்டிட வேலைக்கு செல்வதால், முருகன் வீட்டிற்கு கிருஷ்ணகுமார் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, முருகன் மனைவி வனஜாவுடன் கிருஷ்ணகுமாருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த முருகன் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று மாலை அங்குள்ள மரவள்ளி தோப்பில் வனஜாவும், கிருஷ்ணகுமாரும் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த முருகன் இருவரையும் திட்டியுள்ளார். இதையடுத்து இருவரும் சேர்ந்து முருகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். மறுநாள் காலை வனஜா, முருகன் குடிபோதையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதாக தெரிவித்தனர். இதையடுத்து வனஜா (22), கிருஷ்ணகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.