Today is Saturday 2023 Apr 01
கன்னியாகுமரி
மார்த்தாண்டத்தில் ரூ.3.57 கோடி மதிப்பில் போக்குவரத்துத் துறைக்கு கூடுதல் கட்டிடம்!- முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் ரூ.3.57 கோடி செலவில் அமைக்கப்பட்ட போக்குவரத்துத் துறை அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு வருமாறு: முதல்வர் ஸ்டாலின் இன்று (20.11.2021) தலைமைச் செயலகத்தில், உள்துறை (போக்குவரத்து) சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடத்தை காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.

போக்குவரத்துத் துறை அலுவலகப் பணிகளான பழகுநர் மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் வழங்குதல், புதிய வாகனங்கள் பதிவு செய்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், போக்குவரத்து வாகனங்களுக்கான அனுமதிச் சான்றிதழ் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், வாகனங்களுக்கான சாலை வரிகளை வசூலித்தல், வாகனத் தணிக்கை போன்ற பல்வேறு பணிகளைச் சிறப்பாகவும், துரிதமாகவும் நிறைவேற்றிடவும், பொதுமக்கள் சிரமமின்றி போக்குவரத்துத் துறை தொடர்பான சேவைகளைப் பெறவும் புதிய பகுதி அலுவலகங்களைத் தோற்றுவித்தல், பகுதி அலுவலகங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாகத் தரம் உயர்த்துதல், ஓட்டுநர் தேர்வுத்தள வசதிகளுடன் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 3 கோடியே 57 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விசுவநாதன், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பதிவு: November 20, 2021
மார்த்தாண்டம், போக்குவரத்துறை, முதல்வர் ஸ்டாலின், Chief Minister Stalin, Transport Department
குமரி மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தொடரப்பட்ட புகாரில் தேடப்பட்டுவந்த கன்னியாகுமரி மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற சிறுபான்மையினர் உரிமை மீட்பு குறித்த ஆர்ப்பாட்டத்தில், இந்து கடவுள்கள், பிரதமர் உள்ளிட்டோரை மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் மீது வழக்குகள் தொடரப்பட்டு, தேடப்பட்டு வந்ததால் தலைமறைவானதாக தெரிகிறது. இந்நிலையில், கன்னியாகுமரியிலிருந்து காரில் சென்னைக்கு சென்ற மதபோதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை கருப்பாயூரணி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில், அங்கு வந்த கன்னியாகுமரி காவல்துறையினர் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

பதிவு: July 24, 2021
கன்னியாகுமரி, மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா, மதுரை, Kanyakumari, Pastor George Ponnaiya, Madurai
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்