கரூரில் வாகன தணிக்கையின்போது சாலை விபத்தில் உயிரிழந்த மோட்டர் வாகன ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் நா.கனகராஜ் இன்று 22-11-2021 காலை கரூர்-திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாராத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
நா.கனகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த நா.கனகராஜ், அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரதுகுடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.