மழையால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 5000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்ததால் சில இடங்களில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அத்தகைய பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நிவாரணப் பணியில் சம்மந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகள் எடுக்க வேண்டிய போர்கால நடவடிக்கைகள் குறித்து இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு, தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் டாக்டர் நாரணவரே மணீஸ் ஷங்கர்ராவ், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் குருநாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் செல்வவிநாயகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர் மழையால் ஏற்பட்ட தொற்று நோய்களை தடுப்பதிலும், கட்டுப்படுத்துவதிலும் சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. மழை நீர் புகுந்த இடங்கள், மழை நீர் வடிந்த இடங்களில் வரும் நாட்களில் தொற்று நோய்களைத் தடுக்க பன்முக நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய தேவை உள்ளது.
ஏற்கெனவே, மக்கள் தங்கும் தற்காலிக நிவாரண முகாம்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருதோடு மட்டுமல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாளை பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது 5,000 முகாம்கள் அமைத்திட அறிவுறுத்தப்பட்டது.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சியில் 750 முகாம்களும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மைலாடுதுறை மற்றும் இதர மாவட்டங்களில் எஞ்சிய 4,250 முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது. இது தவிர, 1,500 நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் வெள்ளம் பாதிக்கப்பட்ட வார்டுகளில் மருத்துவ சேவையை வழங்கப்படும்.
நோய் தடுப்பு முகாம்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, தோல் வியாதி, பூச்சி மற்றும் விலங்குகளால் ஏற்படும் நாய்க்கடி, பாம்புக்கடி, மூச்சுத் திணறல், மஞ்சல் காமாலை, உணவு மற்றும் தண்ணீரால் நோய்களை தவிர்க்கும் பொருட்டும் மற்றும் எவருக்கேனும் இத்தகைய அறிகுறிகள் இருந்தால் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் நோய் குறித்த விழிப்புணர்வும், பாதுகாக்கப்பட்ட குடிநீர், புகை தெளிப்பான் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் மற்றும் நோய் கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இத்தகைய முகாம்கள் தேவைப்படும் மாவட்டங்களில் தொடர்ந்து நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.