அகரம் ஊராட்சி மன்ற செயலாளரை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊராட்சி மன்ற செயலாளர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட அகரம் ஊராட்சி மன்ற செயலாளராக மெய்யப்பன் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஊராட்சி செயலாளர் மெய்யப்பன் விடுப்பில் இருந்தார். இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர பி.டி.ஓ-விடம் பணி ஆணை வாங்கி வந்துள்ளார்.
ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் அறிவொளி ராமமூர்த்தி, ஊராட்சி செயலாளர் மெய்யப்பனை பணியில் சேரவிடாமல் தடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், ஊராட்சி செயலாளரை மாற்றும் எண்ணத்துடன் ஊராட்சி மன்ற தலைவர் இருப்பதாக கூறி அப்பகுதி பெண்கள் மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் நேற்று மாலை அகரம் காளியம்மன் கோயிலின் முன்பு 100 க்கும் மேற்பட்டோர், ஊராட்சி செயலாளரை மாற்றக் கூடாது என கோஷமிட்டனர்.
தகவல் அறிந்த காவேரிப்பட்டினம் பி.டி.ஓ அசோக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஊராட்சி செயலாளர் மெய்யப்பனை மீண்டும் பணியில் நியமிப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர்.