Today is Tuesday 2022 Sep 27
கொரோனா
இந்தியாவில் ஒரு லட்சத்தை நெருங்குகிறது கொரோனா பாதிப்பு!- ஒரே நாளில் பறிபோன 325 உயிர்கள்

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 90,928 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.82 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.51 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவால் புதிதாக 90,928 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286 ஆக உயர்ந்தது. கொரோனாவால் புதிதாக 325 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,82,876 ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 19,206 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,43,41,009 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,85,401 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 98.81% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.81% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1,48,67,80,227 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் (91,25,099 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 06, 2022
இந்தியா, கொரோனா, India, Coronavirus
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது!- நம்பர் ஒன் மாநிலம் மகாராஷ்டிரா

இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான், குறுகிய நாட்களில் 100 நாடுகளில் பரவி விட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இதன் பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று வேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 1270 ஆக அதிகரித்து உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவின் 23 மாநிலங்களில் ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 450 பேரும் டெல்லியில் 320 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களின் ஒமிக்ரான் பாதிப்பு விவரம்:

கேரளா 109
தெலங்கானா 62
குஜராத் 97
ராஜஸ்தான் 69
தமிழகம் 46
கர்நாடகா 34
ஆந்திர பிரதேசம் 16
மத்தியப் பிரதேசம் 9,
மேற்கு வங்கம் 11
ஹரியானா 14
ஒடிஷா 14
ஜம்மு காஷ்மீர் 3
உத்தரப்பிரதேசம் 2
சண்டிகர் 3
லடாக் 1
உத்தரகாண்ட் 4
ஹிமாச்சல் பிரதேசம் 1
மணிப்பூர் -1,
கோவா -1
பஞ்சாப் -1
அந்தமான் 2

ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 374 பேர் குணமடைந்துள்ளனர் என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பதிவு: December 31, 2021
இந்தியா, ஒமிக்ரான், மகாராஷ்டிரா, India, Omicon, Maharashtra
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 200 ஆக அதிகரிப்பு!- 77 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் 77 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமிக்ரான் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது.

இதனிடையே நாடு முழுவதும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒமிக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி மகாராஷ்டிராவில் 54 பேர், டெல்லியில் 54 பேர், தெலங்கானாவில் 20 பேர், கர்நாடகாவில் 19 பேர், ராஜஸ்தானில் 18 பேர், கேரளாவில் 15 பேர், குஜராத்தில் 14 பேர், உத்தரப்பிரதேசத்தில் 2 பேர், ஆந்திராவில் 1, சண்டிகரில் 1, மேற்கு வங்கத்தில் 1, தமிழ்நாட்டில் 1 ஆகியோருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேரும், டெல்லியில் 54 பேரில் இதுவரை 12 பேரும், கர்நாடகாவில் 15 பேரும், ராஜஸ்தானில் 18 பேரும், உத்தரபிரதேசத்தில் 2 பேரும், ஆந்திரா, மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பதிவு: December 21, 2021
இந்தியா, ஒமிக்ரான், மகாராஷ்டிரா, டெல்லி, மத்திய சுகாதாரத்துறை, இந்தியா, India, Omicron Variant, Ministry of Health and Family Welfare
11 மாநிலங்களில் 153 பேருக்கு பாதிப்பு!- இந்தியாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான்

இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. கடந்த 2ம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமிக்ரான் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது.


இந்நிலையில், இந்தியா முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது. 11 மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. மகாராஷ்டிராவில் 54, டெல்லி 22, தெலுங்கானா 20, ராஜஸ்தான் 17, கர்நாடகா 14, குஜராத் மற்றும் கேரளா 11, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒன்று என மொத்தம் 153 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

பதிவு: December 20, 2021
இந்தியா, ஒமிக்ரான் வைரஸ், தமிழ்நாடு, India, Omicron Virus, Tamil Nadu
`100 கோடி தடுப்பூசி பிரச்சாரத்தால் பாஜக அரசின் பேரழிவுகளை மூடி மறைக்க முடியாது!'- கே.எஸ்.அழகிரி காட்டம்

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் போட்டுவிட்டதாக மேற்கொள்ளும் பிரச்சாரத்தால் பாஜக அரசின் பேரழிவுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கரோனா தொற்றுப் பரவலினால் கடுமையான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். கொரோனா பரவல் எண்ணிக்கை சமீபகாலத்தில் படிப்படியாகக் குறைந்து வந்தாலும் ஏற்பட்ட மனித இழப்புகளையும், பாதிப்புகளையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றினால் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 3 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 307 ஆகும். மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 530.

இத்தகைய கடுமையான பாதிப்புகளுக்குக் காரணம் முதல் அலையின்போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பாஜக அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாததுதான். இத்தகைய இழப்புகளுக்கு மத்திய பாஜக அரசு முழுப் பொறுப்பு ஏற்காமல், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பாஜக ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். கொரோனா தொற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டு எதிர்கொள்ளாத காரணத்தினால் ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவுகளை மூடி மறைப்பதற்காக, 100 கோடி தடுப்பூசி போட்டிருப்பதைக் கொண்டாடுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகின்றது.

இந்தியத் தொல்லியல் துறையின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுகிற செங்கோட்டை, குதுப்மினார் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கிற கப்பல்கள் ஆகியவற்றை அலங்கார மின் விளக்குகளால் பல்வேறு வண்ணங்களில் ஜொலிக்க வைத்துள்ளனர். நாடு முழுவதும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகளில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய படத்தை இடம்பெறச் செய்து 'மோடி அவர்களே, நன்றி... நன்றி' என்று நாட்டு மக்கள் வாழ்த்துவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் உலகிலேயே 100 கோடி தடுப்பூசிகளைப் போட்ட முதல் நாடு இந்தியா என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை நிலையை ஆய்வு செய்து பார்த்தால் இந்தியா 100 கோடி தடுப்பூசி போட்ட அதேநாள் வரை, சீன நாடு 220 கோடி தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி போடுகிற சாதனை படைத்த சீன நாடு இதை ஒரு விழாவாகக் கொண்டாடவில்லை. அமைதியான முறையில், ஆரவாரமில்லாமல் கரோனா தொற்றை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்று வருகிறது. மேலும், மொத்த மக்கள் தொகையில் 80 சதவிகித பேருக்கு சீன நாடு இருமுறை தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதுவரை 25 சதவிகிதம் பேருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இந்திய மக்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 88 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் வீதம் மொத்தம் 188 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் போட வேண்டும். ஆனால், இதுவரை 107 கோடி தடுப்பூசிகள்தான் போடப்பட்டிருக்கின்றன. மேலும், 80 கோடிக்கு மேல் தடுப்பூசி போட வேண்டிய நிலை இருக்கிறது. மத்திய அரசின் இலக்கின்படி டிசம்பர் 2021-க்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், மாதம் ஒன்றுக்கு 4 கோடி பேருக்குத் தடுப்பூசி போடுகிற நிலையில், மீதியுள்ள 80 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இலக்கை டிசம்பர் 2021-க்குள் பாஜக அடைவதற்கு வாய்ப்பே இல்லை. இந்நிலையில் 100 கோடி தடுப்பூசி போட்டதற்காக தம்பட்டம் அடித்துக் கொள்வது அதன் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக தொடக்கத்தில் தடுப்பூசி போடுகிற பொறுப்பு மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டது. மாநில அரசுகளே தடுப்பூசிகளை நேரடியாக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று விலை நிர்ணயம் செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தவுடன் அந்தக் கொள்கையைக் கைவிட்டு தற்போது மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசு மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்ததற்கு யார் பொறுப்பு?. இத்தகைய பேரிழப்பு குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டதுண்டா?

அதுமட்டுமல்லாமல், 100 கோடி தடுப்பூசி போட்டது இந்திய அறிவியல் துறையின் வெற்றி என்று பிரதமர் மோடி கூறுகிறார். தடுப்பூசிகள் அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், கோவிஷீல்ட் தடுப்பூசியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தயாரித்து ஆக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனத்தின் மூலமாக சீரம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனம் தயாரித்த 88 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மூலமாகத்தான் 100 கோடி இலக்கு எட்டப்பட்டிருக்கிறது. மீதியுள்ள 12 கோடிக்குதான் கோவாக்சின் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. கோவிஷீல்ட் என்பது பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டதே தவிர, இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல.

கடந்த காலங்களில் இந்தியாவின் வரலாற்றைப் பார்க்கிறபோது நேரு பிரதமராக இருந்த காலத்தில் அனைத்துத் தடுப்பூசிகளையும் பொதுத்துறை நிறுவனமே தயாரித்து டைஃபாய்ட், நிமோனியா, மூளைக் காய்ச்சல், பெரிய அம்மை, பிளேக் நோய் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டன. கொரோனா என்ற கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, நேருவின் கடந்த கால நோய்களுக்கு எதிரான போராட்டத்தை நினைவுகொள்வது அவசியமாகும். பிளேக், காலரா நோய்களை அறிவியல் பூர்வமாக முறியடித்த பெருமை இந்தியாவிற்கு உண்டு. 1952ஆம் ஆண்டிலேயே பூனாவில் நிறுவப்பட்ட நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் வைராலஜி நிறுவனம், கொரோனா காலத்தில் பயன்பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே, கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை, உரிய காலத்தில் எடுக்காமல் ஏற்பட்ட பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பாஜக அரசின் இமாலயத் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது" என்று கூறியுள்ளார்.

பதிவு: November 15, 2021
கொரோனா, பாஜக, மோடி, கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ், Corona, BJP, Modi, KSAlagiri, Congress
நவம்பர் மாதத்திற்குள் 100 சதவீதம் தடுப்பூசி!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை நோக்கித் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாளை 8-வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற உள்ளது. இதுவரை சுமார் 75 லட்சம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்துள்ளனர். தமிழகத்தில் 71 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

சென்னையில் நாளை 2,000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழ்நாட்டில் 72 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 33 சதவீத மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

முதல்வரின் அறிவுரையின்படி, நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை நோக்கித் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் சார்பில் ஏற்கெனவே வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 3 லட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 7 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன’’ என்று கூறினார்.

பதிவு: November 13, 2021
கொரோனா தடுப்பூசி, அமைச்சர் சுப்பிரமணியன், Corona Vaccine, Minister Subramaniam
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்