Today is Saturday 2023 Apr 01
சிவகங்கை
கீழடியில் முன்னோர்களின் கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு!

கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய 7 ஆயிரத்து 878 பொருட்கள் கண்டறியப்பட்டன. அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழக அரசின் மாநில தொல்லியல் துறை சார்பில் 2 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யப்பட்டன. இதில் 6 ஆயிரத்து 720 பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த 5 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் கீழடி பகுதிகளில் மட்டுமே நடைபெற்றன.

இதையடுத்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கிய 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது பிராமி எழுத்து உள்ள மண்பாண்ட ஓடு, சூது பவளம், சுடுமண்ணால் ஆன முத்திரையில் ஆமையின் வடிவமைப்பு, விலங்கின எலும்புகூடு, எடை கற்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

6-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. பின்பு அனைத்து பொருட்களையும் ஆவணப்படுத்துதல் பணி மட்டும் நடைபெற்றது. 6 கட்டங்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 498 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வின் போது கீழடியில், நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள், தண்ணீர் குவளையின் முகப்பு பகுதி ஆகியவை கிடைத்திருக்கின்றன. இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு வருவது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: June 11, 2021
கீழடி, அகழ்வாராய்ச்சி, சிவகங்கை, Keezhadi Excavation, Excavation, Sivagangai, tamil news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்