புதன்கிழமை, மே 05, 2021
சென்னை
குறைந்து வருகிறது விலை!- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே!

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் பலர் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,369 ஆக இருந்தது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,371 ரூபாயாக இருந்தது. அதேபோல, 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் குறைந்து 34,968 ரூபாய்க்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
தங்கம், வெள்ளி, சென்னை, பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், Gold, Silver, Chennai, Public, Customers
மீண்டும் எகிறும் தங்கம் விலை!- ஒரே நாளில் சவரனுக்கு ரூ.352 உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 உயர்ந்து ரூ.35,968க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த மாத தொடக்கத்தில் அதிரடியாக சரிந்த தங்கம் விலை அடுத்தடுத்த வாரங்களில் மீண்டும் ஏற்றத்தைக் கண்டது. நேற்று வரையில் தங்கம் விலை பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்தது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.352 அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.4,496க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.35,968க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.69.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,600க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: January 01, 1970
தங்கம், வெள்ளி, Gold, Silver
`போலீஸ் வழக்குப்போட்டு தற்கொலைக்கு தூண்டுகிறது!'- நீதிபதிகளிடம் நடிகை மீரா மிதுன் கதறல்

போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிபதியிடம் கதறலுடன் கூறினார்.

நடிகையும், மாடலுமான மீரா மிதுன், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில், எழும்பூர் 14 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர் மாஜிஸ்திரேட் பாலசுப்பிரமணியன் முன் கதறினார். போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக அவர் கூறினார். எழும்பூர் போலீசார், இந்த வழக்குகள் குறித்து முறையாக தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் குற்றம்சாட்டினார். பின்னர் சிறிது நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா மிதுன் மீதான மொத்தமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை.

பதிவு: January 01, 1970
நடிகை மீரா மிதுன், சென்னை போலீஸ், Actress Meera Mithun, Chennai Police
ராஜேஷ் தாஸ் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற மறுப்பு; உயர்நீதிமன்றம் கண்காணிக்க தடை!

தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க தடை விதித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தன் மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "இந்த வழக்கில் உரிய நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. தன் மீது குற்றச்சாட்டு பதிய வேண்டும் என்ற நோக்கிலேயே அனைவரும் செயல்படுகின்றனர். சில அரசு அதிகாரிகளே தனக்கு எதிராக இருக்கின்றனர். எனக்கு எதிரான வழக்கு விசாரணையை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்றால் நேர்மையாக இருக்காது. எனவே வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். முன்னரே பேசி வைத்தது போல் எனக்கு எதிராக அனைவரும் செயல்படுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் காழ்புணர்ச்சியின் காரணமாக தன்னுடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளே தனக்கு எதிராக செயல்படுகின்றனர். இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் தனக்கு எந்தவொரு ஞாயமும் இந்த விஷயத்தில் கிடைக்காது" என கூறியிருந்தார்.

அதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், "குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிய சட்ட ரீதியிலான நியாயங்கள் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதாவது யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற விஷயத்தில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரத்தில் இவர் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், சிறப்பு டிஜிபியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்பது சாதாரணமானவை அல்ல. அது மிகவும் தீவிரமானது. விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அதனை கீழமை நீதிமன்றம் விசாரிக்க கூடாது. இடைக்காலமாக தடை விதித்திருந்தீர்கள். அதனை கீழமை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உயர் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் போது இத்தகைய விவகாரங்கள் தினசரி விசாரிக்கப்பட்டு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் அரசின் மீதும் நம்பிக்கை ஏற்படும்" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பிறகு மனுதாரர் சார்பாக வாதிடுகையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் தானாக முன்வந்து கண்காணிப்பதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் இந்த வழக்கை மேலும் பூதாகரமாக ஆக்கக்கூடிய விஷயம். நான் ஒரு நேர்மை தவறாத ஒரு அதிகாரியாக இருந்திருக்கிறேன். எனவே சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தை தானாக முன்வந்து கண்காணிப்பது என்பது சரியானது இல்லை என தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், "வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனுதாரருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கண்காணிப்பை செய்யக்கூடிய அந்த முடிவை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது. வழக்கு தமிழகத்தில் தான் நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளனர். அதேநேரத்தில் தேவையில்லாமல் வேறு பல விஷயங்கள் இந்த வழக்கில் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதையும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே அடுத்த உத்தரவின் போது கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை என்பது நீக்கப்படும் என்று தெரிகிறது.

பதிவு: January 01, 1970
ராஜேஷ் தாஸ், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பாலியல் புகார், பெண் எஸ்பி, Rajesh Das, High Court, Supreme Court, Sex Complaint, Female SP
ஆபாச பேச்சு... கொலை மிரட்டல்..!- ஜி.பி.முத்து மீது நடிகர் சுகுமார் போலீஸில் புகார்

தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் யூடியூபர் ஜி.பி முத்து உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காதல் சுகுமார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

காதல், திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிவர் சுகுமார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் மூலமாக பள்ளி மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சமூக வலைதளங்களில் இலக்கியா, ஜிபி முத்து உட்பட பல நபர்கள் ஆபாசங்கள் நிறைந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

இதனை தடுத்து நிறுத்த வேண்டி சமீபத்தில் எனது நண்பர் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளர் ஏழுமலை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக நானும் ஊடகங்கள் வாயிலாக பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்தேன்.

இதையடுத்து நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் தொடர்ந்து சமூக வலைதளம் வாயிலாக எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள். அவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆபாசங்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும் காதல் சுகுமார் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

பதிவு: January 01, 1970
ஜி.பி.முத்து, நடிகர் சுகுமார், சென்னை போலீஸ், GPMuthu, Actor Sugumar, Chennai police
மருத்துவர் சுப்பையா கொலையில் 7 பேருக்கு தூக்குத் தண்டனை; 2 பேருக்கு ஆயுள்!- சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக, ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப் படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஐயப்பன் அப்ரூவராக மாறினார். கடந்த 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின், தீர்ப்பை ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பதாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், பொன்னுசாமி, மரியபுஷ்பம், பஷில், போரீஸ், வில்லியம், யேசுராஜா, டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே, தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கொலைக்கு உடந்தையாக இருந்தாக கூறி ஆசிரியர் மேரி புஷ்பம், கூலிப் படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்ரூவராக மாறிய  ஐயப்பன் என்பவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.

பதிவு: January 01, 1970
மருத்துவர் சுப்பையா கொலை, சென்னை நீதிமன்றம், Doctor Subbaiah murder, Chennai court
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like