Today is Saturday 2021 Dec 04
சேலம்
மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு!

மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில வாரங்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினாலும் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் வரலாற்றில் 41-வது முறையாக நிரம்பியது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அந்த உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரை புரண்டு ஓடுகிறது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படுவதை அமைச்சர் துரைமுருகன் இன்று பார்வையிட்டு ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் அணையின் கொள்ளளவு, நீர்வரத்து, உபரிநீர் வெளியேற்றம், அணையின் பாதுகாப்புக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கரையோர பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இதற்காக அவர் கார் மூலம் சேலம் வருகிறார். காலை 10 மணிக்கு மேட்டூர் அணையை பார்வையிடுகிறார். அவருடன் நீர்வளத்துறை தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் உள்பட அரசு உயர் அதிகாரிகள் உடன் செல்கிறார்கள்.

பின்னர் அவர்கள் அணையின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள் இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் மேட்டூர் திப்பம்பட்டியில் நடைபெற்று வரும் பிரதான நீரேற்று நிலைய பணிகளை பார்வையிடுவதுடன், திப்பம்பட்டியில் இருந்து மேட்டூர் உபரிநீரை மக்கள் பயன்பாட்டிற்காக வழங்கும் பணியையும் பார்வையிடுகிறார். பின்னர் அவர் சென்னை திரும்புகிறார்.

பதிவு: November 16, 2021
மேட்டூர் அணை, துரைமுருகன், திமுக, Mettur dam, Durai murugan, dmk
நேருக்கு நேர் மோதியதில் லாரிக்குள் புகுந்தது கார்!- பறிபோன அரசு மருத்துவர் உள்பட 3 பேரின் உயிர்

மேட்டூர் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அரசு மருத்துவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி, உடையானூரைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் தேவநாதன் (53). இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்திராணி (51). மேட்டூரை அடுத்த வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

மேட்டூர், மேச்சேரி, குலாலர் வீதி, சுப்பிரமணியம் நகரைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் சத்தியசீலன் (24). இவர், தேவநாதன் வேலை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தேவநாதனும், இந்திராணியும் கோவையில் உள்ள மருத்துவமனைக்கு காரில் செல்ல, உடன் சத்தியசீலனையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் மூவரும் நேற்று இரவு கோவையிலிருந்து மேட்டூர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தேவநாதன் ஓட்டிச் சென்றார். பவானி - மேட்டூர் சாலையில் காடப்பநல்லூர் பிரிவு அருகே சென்றபோது, மேட்டூரிலிருந்து பவானி நோக்கி வந்த லாரியும் காரும் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதனைக் கண்ட அப்பகுதியினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மூவரையும் மீட்க முயன்றனர்.

இந்த விபத்தில் கார், லாரியின் முன்பகுதியில் சிக்கிக் கொண்டதால் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், பவானி போலீஸார் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாகப் போராடி, இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரையும் மீட்டனர். பரிசோதனையில் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பதிவு: October 29, 2021
கார், லாரி, விபத்து, அரசு மருத்துவர் பலி, Car, truck, accident, government doctor killed
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சலுகை!- 7 காவலர்கள் அதிரடி சஸ்பெண்ட்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க அனுமதித்த சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் உள்பட 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் சேலம் மத்திய சிறையிலும், 4 பேர் கோபி கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு 9 கைதிகளும் காவல்துறை வாகனங்களில் அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு கைதிகள் அனைவரும் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில் சபரிராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன், வசந்த்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேரும் ஒரு வாகனத்திலும், அருளானந்தம், ஹேரேன் பால், பாபு, அருண் குமார் ஆகிய 4 பேர் மற்றொரு வாகனத்திலும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் சபரிராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்டோர் வந்த வாகனங்கள் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது கருமத்தம்பட்டி பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டு, கைதிகளின் உறவினர்களை அவர்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில் கைதிகளை சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி குற்றவாளிகளை அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம் மற்றும் காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், ராஜேஷ்குமார், நடராஜன், கார்த்தி உள்ளிட்ட 7 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: October 21, 2021
பொள்ளாச்சி பாலியல் வழக்கு, கைதிகள், காவலர்கள், சேலம் போலீஸ் கமிஷ்னர், Pollachi sex case, prisoners, police, Salem police commissioner
மீண்டும் `கலைஞரின் வரும்முன் காப்போம்' திட்டம்!- சேலத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் ‘கலைஞரின் வரும்முன் காப்போம்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2006ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்ட முகாமில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைந்தனர். பின்னர் அதிமுக ஆட்சி வந்தபோது, இத்திட்டம் முழுமையாக கைவிடப்பட்டது. தற்போது, இந்த திட்டம் ‘கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம்’ என்ற பெயரில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில் சேலம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், வாழப்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர், வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார். இந்த திட்டத்தின் கீழ் 1,250 மருத்துவ முகாம்களையும் முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குடல் நோய் மற்றும் குழந்தைகள் மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், தோல் மருத்துவர், இருதய மருத்துவர், சிறுநீரக மருத்துவர், நரம்பியல் மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் நியமிக்கப்படுவர்.

இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு உடலில் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடி சிகிச்சை, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படும். இதில் சர்க்கரை, புற்றுநோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் கண்டறியப்படுபவர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவ உதவிகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பதிவு: September 29, 2021
வரும்முன் காப்போம், மருத்துவ திட்டம், முதல்வர் ஸ்டாலின், திமுக. CMStalin, DMK, TNGovt
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like