Today is Wednesday 2023 Feb 01
தமிழ்நாடு
வெளியாகியிருக்கும் தரமான ‘வலிமை’ அப்டேட்! ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹீமா குரைஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இத்திரைப்படத்தின் அப்டேட்டுக்காக தீச்சட்டி தூக்காத குறையாக காத்திருந்த ரசிகர்கள் பலர்.

எங்கும், எவரிடம் அதிகம் முணுமுணுக்கப்பட்ட சொல் ‘வலிமை அப்டேட்’. அந்தளவிற்கு இச்சொல்லை உலக அளவில் பலரையும் மொழியவைத்தனர் அஜித்தின் ரசிகர்கள்.

இந்நிலையில் தான், வலிமை திரைப்படத்தின் முதல் அப்டேட்டாக அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது. அதைத் தொடர்ந்து வலிமை கிளிம்ஸ், ‘வேற மாரி’ பாடல், ‘அம்மா’ பாடல், மேக்கிங் வீடியோ, ட்ரைலர் உள்ளிட்ட அப்டேட்டுகள் தொடர்ந்து விடப்பட்டன.

இதைத் தொடர்ந்து, வலிமை திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பும் வெளியானது. அதன்படி வலிமை திரைப்படம், பொங்கலை முன்னிட்டு இவ்வருடம் ஜனவரி 13-ல் வெளியிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.

ஆனால் கொரோனா பொதுமுடக்கம், திரையரங்க இருக்கை குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், வலிமை வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக வெளியான அறிவிப்பு அஜித் ரசிகர்களை பேரிடியாய்த் தாக்கியது.

இதையடுத்து, மீண்டும் தலைதூக்கிய ‘வலிமை அப்டேட்’ கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தற்சமயம் வெளியாகியுள்ளது வலிமை படத்தின் வலிமையான அப்டேட்.

அதன்படி, வலிமை திரைப்படம், தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் பெரும் ஆரவாரத்தில் திளைத்துவருகின்றனர்.

பதிவு: February 02, 2022
அஜித் ,வலிமை,போனி கபூர் ,வலிமை அப்டேட்,தேதி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டி! பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு!

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கட்சி தனித்துப் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16, 19 தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்ததை அடுத்து, வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இதையடுத்து பல்வேறு கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் பிற கட்சிகளுடன் இறங்கி தங்கள் கட்சிகளுக்கான இடங்களை கைப்பற்றிவந்தன.

இந்நிலையில், பாஜக – அதிமுக கட்சிகளுக்கிடையிலான இடஒதுக்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை, கடந்த சனிக்கிழமை தொடங்கி முடிவு எதுவும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் சுமுக நிலை எட்டப்படாததையடுத்து, பாஜக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உந்து சக்தியாக இருக்கின்றனர். காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டத் திருத்தம், வேளாண் சட்டம் வரை பாஜகவிற்கு துணையாக இருந்தனர்.

தொண்டர்களின் குரலுக்கு செவிசாய்த்து, அகில இந்திய தலைவர்களும் ஏற்ற பிறகே அதிமுகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகின்றனர்.

மேலும் இது கடினமான முடிவு அல்ல. அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற தொண்டர்கள் குரலுக்கு செவி சாய்த்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான தருணத்திலும் திறமையாக கட்சி நடத்துகின்றனர் ஓபிஎஸ், ஈபிஎஸ்” இவ்வாறு அவர் கூறினார்.

பதிவு: January 31, 2022
நகர்ப்புற உள்ளாட்சி,பாஜக ,பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,தனித்து போட்டி,தேர்தல்
புலிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு சர்வதேச விருது அறிவிப்பு...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதற்காக சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள வனங்களில் வாழும் புலிகளைக்காப்பதற்காகவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அளவிலான அமைப்புகள்,பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த அமைப்பினர் நடத்திய ஆய்வில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், கடந்த 2010-ம் ஆண்டு இருந்த புலிகளின் எண்ணிக்கை, தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து சத்தி புலிகள் காப்பகத்திற்கு டிஎக்ஸ் 2(TX2) விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டபுள்யு டபுள்யு எப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நீலகிரி உயிர்க்கோள நிலப்பரப்பைச் சேர்ந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் புலிகள் வாழ்கின்றன. கடந்த 2013-ம் ஆண்டு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட சத்யமங்கலத்தில் தற்போது 80 புலிகள் உள்ளன. முதுமலை புலிகள் காப்பகம், பந்திப்பூர் மற்றும் பி.ஆர்ஹில்ஸ் புலிகள் காப்பகங்களுடன் இந்த காப்பகம் இணைந்துள்ளது. இதனால் புலிகளால் எளிதாக இரை தேடவும் புதிய எல்லைக்குள் பிரவேசிக்கவும் முடிகிறது.

இதேபோல், புலிகளின் எண்ணிக்கையை இருமடங்கு அதிகரித்ததற்காக நேபாளத்தில் உள்ள பார்டியா தேசியப் பூங்காவும், இந்த ஆண்டுக்கான டிஎக்ஸ் 2 விருதினைப் பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நேபாளத்திற்கும் இடையே புலிகள் தடையின்றி, எல்லைகளைத் தாண்டிச் சென்று வர இந்த பூங்கா வழிவகுக்கிறது.

உலக அளவில் 2010-ம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை 3200 ஆக சரிந்திருந்த நிலையில், 2016-ல் நடத்தப்பட்ட ஆய்வில் புலிகள் எண்ணிக்கை 3900-மாக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: January 27, 2022
சத்தியமங்கலம் , புலி,இரு  மடங்கு,சர்வதேச விருது ,அதிகரிப்பு
தமிழகத்தில் 314 கோயில்களில் வழங்கப்படும் பிரசாதம், அன்னதான உணவுக்கு இந்திய அரசு தரச்சான்று வழங்கியது- சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் பாராட்டு...

தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திருக்கோயில் செயல் அலுவலர்களை பாராட்டி, தரச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு – அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை – அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், சென்னை, தங்கசாலை - அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருமுல்லைவாயில் – அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், திருப்போரூர் – அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், மகாபலிபுரம் – அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில், சென்னை – அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், சென்னை – அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களின் இணை ஆணையர், செயல் அலுவலர்களை பாராட்டி, தரச்சான்றிதழ்கள் வழங்கி, வாழ்த்தினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தற்போது 754 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் பழனி - அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் - அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம் - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் மற்றும் திருத்தணி - அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.76 கோடி செலவில் 754 திருக்கோயில்களில் நாள் ஒன்றுக்கு 70,000 பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுபாட்டு நிறுவனம், நாடு முழுவதும் உணவு தயாரித்து வழங்கிடும் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை பரிசோதித்து தரச்சான்றிதழ் வழங்கும் பணியினை செய்து வருகிறது. இந்நிறுவனம் மத வழிபாட்டு தலங்களில் தயாரிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாத வகைகளை பரிசோதித்து கடவுளுக்கு சுத்தமான சுகாதாரமான பிரசாதம் படைத்தல் (BHOG-Blissful Hygienic Offering to God) சான்றிதழ்களை வழங்கி வருகிறது.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதான உணவு வகைகள் சுத்தமாகவும் சுகாதாரத்துடனும் தயாரிக்கப்படுவதை பரிசோதனைக்குட்படுத்தி இந்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றிதழ்கள் 6 திருக்கோயில்களுக்கு மட்டுமே பெறப்பட்ட நிலையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் சீரிய முயற்சியால் 308 திருக்கோயில்களுக்கு தரச்சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், 440 திருக்கோயில்களுக்கு சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் 394 மத வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் 314 திருக்கோயில்களுக்கு இச்சான்றிதழ் பெறப்பட்டு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இதன் மூலம் திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் சுத்தமாகவும், சுகாதார முறையிலும் தயாரித்து வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்துள்ளது.

பதிவு: January 24, 2022
314 திருக்கோயில்கள்,முதல் அமைச்சர் முக ஸ்டாலின்,இந்திய உணவு பாதுகாப்பு ,BHOG ,தரச் சான்றிதழ்,தமிழ்நாடு
விபத்தில் காயமடைந்து மூளையில் ரத்தக்கசிவு; உயிர்பிழைத்த சிறுவனிடம் போனில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்...

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளையில் அடிபட்டுஉயிர்பிழைத்த சிறுவனிடம் போனில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் சாலை விபத்தில் மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' அரசு திட்டம் மூலம் உயிர்பிழைத்த சிறுவனிடம் போன் மூலம் கலந்துரையாடி முதல்வர் ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் அடிபட்டு உயிர்பிழைத்த சிறுவனிடம் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். அப்போது, ''தம்பி ஸ்டாலின் பேசுறேன். நல்லாயிருக்கியா, வலி இருக்குதா. தைரியமா இரு, எப்படி விபத்து ஏற்பட்டது'' என்றும், ''மருந்துகள் கொடுத்திருக்கிறாங்களா'' என்றும் கேட்டறிந்தார். ''ஏதேனும் வேண்டுமென்றால் எம்.பி ராஜேஸிடம் தெரிவிக்கவும்'' என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது முதல்வரிடம் பேசிய சிறுவனின் தாயார் தங்களது மகனை காப்பாற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி.சிங், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் சிறுவன் சு.வர்ஷாந்த் உடன் இருந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறுவன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி, வசந்தபுரம் அருகில் உள்ள குப்பம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வர்ஷாந்த் (வயது 13), 13.1.2022 அன்று பொங்கல் திருநாளுக்கு பயன்படுத்தும் பூலப்பூவை விற்றுவிட்டு, தனது தந்தை, தாய் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, எதிரில் வந்த இரு சக்கர வாகனம் மோதி இரவு 7.00 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தாய், தந்தை இருவருக்கும் பாதிப்பு இல்லை. விபத்தில் சிறுவன் வர்ஷாந்த்க்கு தலையில் காயம் ஏற்பட்டது. தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இரவு 7.50 மணியளவில் சேர்க்கப்பட்டார்.

நாமக்கல் தனியார் மருத்துவ மனையில் அரசு திட்டத்தின்மூலம் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறுவன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

இந்த மருத்துவமனையில் முதல்வரின் சிறப்பு திட்டமான 'இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48' திட்டத்தின் கீழ் சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொண்டார்கள். சிறுவன் வர்ஷாந்த்துக்கு தலையில் அடிபட்டதால், அவசர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

12 மணி நேரம் கழித்து மூளையில் ரத்தக் கசிவு அதே அளவில் உள்ளதா, அதிகரித்துள்ளதா என்பதற்காக மீண்டும் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. ரத்தக் கசிவும், மூளை அழுத்தமும் அதிகமானதால் அன்றே நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் (நியூரோ சர்ஜன்) மருத்துவர் பாலசுப்பிரமணியன், மருத்துவர்.ஷியாம்சுந்தர் உள்ளிட்ட குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொணன்டர். இதன்மூலம் ரத்தக் கசிவு அகற்றப்பட்டது.

விபத்தில் சிக்கிய சிறுவன் வர்ஷாந்துக்கு உடனடியாக சிகிச்சை, பரிசோதனை அடிப்படையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உயிர் காக்கப்பட்டார். தற்போது செல்வன் வர்ஷாந்த் தெளிவாக நல்ல நிலையில் உள்ளார். இவர் சிகிச்சை முடித்து தற்போது பொட்டிரெட்டிபட்டி மண்கரடு பகுதியில் உறவினர் வீட்டில் உள்ளார். சிகிச்சை குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், ''சாலை விபத்தில் பாதிக்கப்படக்கூடிய ஏழை நோயாளிகளுக்கு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டம் - மிகப் பெரிய நன்மை பயக்கும். மிகப்பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் இத்திட்டத்தில் அனுமதி அளித்து திட்டத்தை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி'' என்றார்.

பதிவு: January 22, 2022
நாமக்கல் ,சாலை விபத்தில்,சிறுவனிடம் ,முக ஸ்டாலின்,போன் மூலம் கலந்துரை
மதுரையில் நவீன ஐடி பூங்கா முதல் மெட்ரோ வரை- முதல்வரிடம் சு.வெங்கடேசன் எம்.பி. 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்...

மதுரை மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அளித்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:

மதுரை மாவட்டத்தில் 4 புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும்; மேலூர் பகுதி தொழிற்பேட்டைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; மதுரைக்கான மாஸ்டர் பிளானில் புதிய தொழிற்சாலைகளுக்கு 10 சதவிகித இடங்களை வகைப்படுத்த வேண்டும்; மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழித் திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்த தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்; மதுரையில் புதிய நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப பூங்காவினை உருவாக்க வேண்டும்.

மதுரையில் ஜவுளி தொழிலை மேம்படுத்த ஜவுளிக்கென தனியாக வாரச் சந்தையினை உருவாக்க வேண்டும்; சுங்கடிச் சேலைகளுக்கான சிறப்பு சந்தையினை ஏற்படுத்த வேண்டும்; உயிரியல் துறையில் சிறு-குறு தொழில்களை ஊக்குவிக்க காமராசர் பல்கலைக்கழகத்தில் டைசல் பூங்காவினை உருவாக்க வேண்டும்; மதுரையின் மையத்தின் இருக்கும் மத்திய சிறைச்சாலையினை உடனடியாக புறநகர் பகுதிக்கு மாற்றிட வேண்டும்; சிந்து முதல் வைகை வரை செழித்தோங்கிய தமிழர் நாகரிகத்திற்கான உலகத் தரத்திலான அருங்காட்சியகத்தினை தற்போது மதுரை
மத்திய சிறைச்சாலை இருக்கும் இடத்தில் அமைத்திட வேண்டும். அதற்கு உலக அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.

பாத்திமா கல்லூரி முதல் கன்னியாகுமரி நெடுஞ்சாலை சந்திப்பு வரை வைகையின் வடக்கு நதிக்கரை சாலையை விரிவுபடுத்த வேண்டும்; காளவாசலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் மேலக்கால் சாலையை விரிவுபடுத்த வேண்டும்; விரகனூர் சந்திப்பு , மண்டேலாநகர் சந்திப்பு, மேலமடை, அரசு ராஜாஜி மருத்துவமனை, மாட்டுத்தாவணி , தெற்குவாசல், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிய மேம்பாலங்களை அமைக்க வேண்டும்; பழுதான நிலையில் உள்ள மேயர் முத்து பாலத்தை சீரமைக்க வேண்டும்; பழங்காநத்தம் வஉசி பாலத்தினை விரிவுபடுத்தி புதுப்பிக்க வேண்டும்.

மதுரை மாவட்ட விரைவு போக்குவரத்து ஏற்பாட்டிற்கு மதுரை மெட்ரோவிற்கான சாத்தியக்கூறு விரைந்து செய்யப்பட வேண்டும்; வைகை நதியினை பாதுகாக்க ஐந்து மாவட்ட நிர்வாக தலையீடுகளை மாற்றி ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டு வருகிற புதிய வைகை நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்; மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டத்தினை மேற்கொள்ள வேண்டும்; வைகை உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பது கழிவுநீர் உடனடியாகத் தடுக்கப்பட வேண்டும்.

மதுரை மாநகரின் சாலைகளை சீரமைக்க உடனடியாக 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட வேண்டும்; அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அதிநவீன கலை அரங்கம் உருவாக்கப்பட வேண்டும்; உலகத் தமிழ் சங்கத்தினை சீரமைத்து அனைத்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் பயன்படுத்தும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரியினை உருவாக்க வேண்டும்; கொட்டாம்பட்டியில் புதிய அரசு ஐடிஐ உருவாக்க வேண்டும்; மதுரை தல்லாகுளம் அவுட்போஸ்ட் காமராசர் பல்கலைக்கழக கல்லூரியினை அரசுக் கல்லூரியாக மாற்றிட வேண்டும்; மதுரை விமான நிலைய விரிவாக்க சுரங்கப்பாதை, மதுரை நகரத்தின் புதிய உள்வட்டச்சாலை , வெளிவட்டச்சாலை உள்ளிட்ட ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை ஆலையை இயக்கிடவும், அதற்கான பணிகளுக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கிடவும் வேண்டும்; விவசாயிகளின் நலனுக்காக சாத்தையாறு அணையில் பெரியார் பிரதான கால்வாய் மூலம் நீரை தேக்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வினை துவக்க வேண்டும்; மேலூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் புதிய கட்டிடம் கட்ட 50 கோடி ரூபாய் ஒதுக்கிட வேண்டும்; மதுரையின் பசுமைப் போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து , ஏற்கெனவே உள்ள காடுகளை பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்; மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் அதன் முழுக் கொள்ளளவிற்கு தூர்வாரிட வேண்டும்.

வைகையின் பிறப்பிடமான மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; மதுரையின் சுற்றுச்சூழலை மீட்டுருவாக்கம் செய்து காற்று மாசுபடுதலை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்; மதுரை எய்ம்ஸ், மதுரை நைபர், மதுரை சர்வதேச விமான நிலைய கோரிக்கைகளில் தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை
உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பதிவு: January 19, 2022
முக ஸ்டாலின்,சு வெங்கடேசன்,23 கோரிக்கைகள் அடங்கிய மனு, நவீன ஐடி பூங்கா முதல் மெட்ரோ வரை
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்