தமிழர் திருநாளான தைத் திருநாளின் அடையாளங்களாக விளங்கும் கரும்பு, மஞ்சள் குலை, பனையோலை, மண் பானை, மண் அடுப்பு ஆகியவற்றின் விற்பனை திருநெல்வேலியில் பல இடங்களிலும் தொடங்கியுள்ளது.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் உற்சாகத்துடன் பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை தொடங்கியுள்ளது. கரும்பு, மண் அடுப்பு, மண் பானை, பனையோலை, மஞ்சள் குலை போன்றவை திருநெல்வேலி யில் பல இடங்களிலும் விற்பனை செய்யப் படுகின்றன.
தேனி மாவட்டத்திலிருந்து லாரி களில் கரும்புகள் கட்டுக்கட்டாக வந்திறங்கியுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், வி.கே.புரம், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதிகளில் ஓரளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. இதுபோதாது என்பதால் தேனி, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் இருந்து கரும்புகள் கொண்டுவரப்படுகின்றன.
திருநெல்வேலி டவுன் பகுதிகளில் தேனி மாவட்ட கரும்புக் கட்டுகள் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனையாகிறது. 10 எண்ணம் கொண்ட கரும்புக் கட்டு ரூ.300 முதல் ரூ.400 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு ரூ.30 முதல் ரூ.40 வரையில் விற்கப்படுகிறது.
இதுபோல மஞ்சள் குலை விற்பனை யும் விறுவிறுப்படைந்துள்ளது. ஒரு மஞ்சள் குலையுடன் கூடிய செடி ரூ.10 முதல் ரூ.20 வரையில் தரத்துக்கு ஏற்ப விற்பனையாகிறது. திருநெல்வேலி டவுன் சாலைத்தெரு, தச்சநல்லூர், அருகன்குளம், வெள்ளக்கோவில், கோட்டூர், பொட்டல் போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் செடிகள், சந்தைகளுக்கு விற்பனைக்கு வருகின்றன.
வீடுகள் முன் பொங்கல் வைக்க மண் பானைகள், அடுப்புகள், அடுப்பு எரிக்க பனை ஓலைகளும் கூட பரவலாக விற்பனை செய்யப்படுகின்றன. பாளையங்கோட்டை கோபால சுவாமி கோயில் வளாகப் பகுதிகளில் பொங்கலுக்கான மண்பானைகள், அடுப்புகள், பனை ஓலைகள் அதிகளவில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
கரோனா அச்சம், அரசின் கட்டுப் பாடுகள், ஊரடங்கு ஆகியவற்றுக்கு இடையே பொங்கல் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இன்றும், நாளையும் பொங்கல் பொருட்கள் விற்பனை அதிகமாக இருக்கும் என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.