சாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது காரில் பயங்கர வெடி பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது காரிலிருந்து அலாரம் அடித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் தனது காரில் உள்ள ரிமோட் மூலம் காரை லாக் செய்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. மீண்டும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக ஊர் முழுவதும் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.
பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை சட்டவிரோதமாக காரில் ஏற்றி வந்தது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.