புதன்கிழமை, மே 05, 2021
தேசிய செய்திகள்
நீதிமன்றத்திலேயே பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை!- டெல்லியில் நடந்த அதிர்ச்சி

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஜிதேந்தர் கோகி என்பவருடன் மேலும் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கோகியின் எதிர்தரப்பான டெல்லி தரப்பினர், வக்கீல்கள் போல் உடை அணிந்து வந்து தாக்கினர்.

மேலும், இருதரப்பினருக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் இதே வளாகத்தில் 38 வயது வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: January 01, 1970
டெல்லி நீதிமன்றம், ரடிவு, சுட்டுக்கொலை, Delhi court, raid, shooting
வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது!- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்து 60,158 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நேற்று பங்குச் சந்தை முடிவின்போதே சென்செக்ஸ் 59,885 புள்ளிகளில் இருந்தது. மேலும், நிப்டி 17,883 புள்ளிகளில் இருந்தது. இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டும் என முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

எதிர்பார்த்ததை போலவே இன்று சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. தற்சமயம் சென்செக்ஸ் 60,214.68 புள்ளிகளாக உள்ளது. நிப்டி தற்போது 17,900 புள்ளிகளுக்கு மேல் உள்ளது.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்டிஎல் டெக், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டெக் மகிந்த்ரா ஆகிய பங்குகள் அதிகபட்சமாக முன்னேறியுள்ளன. டாடா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி, மகிந்த்ரா ஆகிய பங்குகள் சரிந்துள்ளன.

அமெரிக்க ஃபிடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நேற்று அமெரிக்க மார்க்கெட்டுகள் 1 விழுக்காடுக்கு மேல் உயர்ந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.

இதுபோக, கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதும், தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், அன்லாக் மனநிலை உருவாகியுள்ளதும் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

பதிவு: January 01, 1970
மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, சென்செக்ஸ், நிப்டி, Mumbai Stock Exchange, National Stock Exchange, Sensex, Nifty
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்!- நிபுணர் குழு அமைக்கிறது உச்சநீதிமன்றம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான அமளியில் ஈடுபட்டன.

இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஒன்றிய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுங்கள் என 2 முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டும் ஒன்றிய அரசு அதனை செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

பதிவு: January 01, 1970
பெகாசஸ், உச்சநீதிமன்றம், மத்திய அரசு, Pegasus, Supreme Court, Central Government
கோயிலுக்குள் சென்று வழிபட்ட குழந்தை... பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதித்த ஊர் மக்கள்... கர்நாடகாவில் அதிர்ச்சி

தனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ளது மியபுரா கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரின் 2 வயது குழந்தைக்கு கடந்த 4ம் தேதி பிறந்த நாள் . இதையடுத்து அருகில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று வழிபட்டனர் பெற்றோர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ல அந்த கிராமத்தினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து கோயிலின் வெளியே நின்று அவர்கள் வழிபட்டனர்.

அப்போது. குழந்தை திடீரென கோயிலுக்குள் ஓடி, சாமி கும்பிவிட்டு திரும்பியது. இதைக் கண்ட அந்தப் பகுதியினர் பட்டியலின குழந்தை எப்படி கோயிலுக்குள் செல்லலாம்? என பிரச்னையாக்கினர். இதையடுத்து அந்த கிராமத்தினர் கூடி பேசி, கோயிலுக்குள் குழந்தை சென்றதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்கான பூஜைக்காக இந்த தொகையை அபராதமாக விதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மியபுரா கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி கோப்பல் நகர போலீஸ் எஸ்.பி டி.ஸ்ரீதர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தோம். மக்களுக்கு அறிவுரை செய்தோம். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டனர்" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: January 01, 1970
கர்நாடகா, கோயில், குழந்தை, பட்டியலின பெற்றோர், அபராதம், Karnataka, temple, child, parent, fine
5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெற்றது உயர்நீதிமன்றம்!

புதிய வாகனங்களுக்கு, செப்டம்பர் 1 முதல், 'பம்பர் டூ பம்பர்' காப்பீடு கட்டாயம் என பிறப்பித்த உத்தரவை, திரும்பப் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில் வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என்று அனைவரையும் உள்ளடக்கும் வகையில், 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, பொதுக் காப்பீட்டு மன்றம் சார்பில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு மெமோ ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் பெற்று உயர் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதை ஏற்ற நீதிபதி, செப்டம்பர் 1 முதல் 5 ஆண்டுகளுக்கான கட்டாய வாகன காப்பீடு உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய சூழ்நிலையில் அனைத்து வாகனங்களுக்கும் காப்பீடு வழங்குவது சாத்தியமில்லை என காப்பீட்டு நிறுவனங்கள் அமைப்பின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பம்பர் டூ பம்பர் அடிப்படையில் காப்பீடு செய்வது கட்டாயம் என்ற உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். மேலும், போக்குவரத்துத்துறை இதற்கென பிறப்பித்த சுற்றறிக்கையும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை என்றும், பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு கொண்டு வரும் என்று நம்பிக்கை உள்ளதாகவும் நீதிபதி கருத்து கூறினார்.

பதிவு: January 01, 1970
வாகனம் காப்பீடு, சென்னை உயர்நீதிமன்றம், Vehicle insurance, Madras High Court
வங்க கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு!- 6 மாநிலங்களில் `செம' மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் இந்த காற்றழுத்தம் மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வங்கக்கடல் பகுதியில் மத்திய வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி, ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பதிவு: January 01, 1970
இந்திய வானிலை ஆய்வு மையம், ஒடிசா, பஞ்சாப், சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா, Indian Meteorological Department, Orissa, Punjab, Chhattisgarh, Delhi, West Bengal, Andhra Pradesh
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like