Today is Saturday 2023 Apr 01
தேனி
வங்கக்கடலில் உருவானது புயல்!- தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாகவும் இதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,' வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல் 9 மற்றும் 10 ம் தேதிகளில் தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அத்துடன் இன்று முதல் வருகிற 10ம் தேதி வரை கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகள், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பதிவு: September 06, 2021
வங்கக்கடல், புயல், சென்னை வானிலை மையம், மழை, Bengal sea, storm, Chennai Weather Center, rain
`10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு'- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 17 மற்றும் 18-ம் தேதிகளில், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 16ம் தேதி வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே போல், நாளை முதல் 18ம் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல், மத்திய அரபிக்கடல் மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவும் மேகமூட்டத்துடன் காணப்படும், என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: July 14, 2021
சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, புதுச்சேரி, காரைக்கால், Chennai Meteorological Center, Nilgiris, Coimbatore, Theni, Dindigul, Tenkasi, Pondicherry, Karaikal
தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்