புதன்கிழமை, மே 05, 2021
முதன்மை செய்தி
நீதிமன்றத்திலேயே பிரபல தாதா உள்பட 4 பேர் சுட்டுக்கொலை!- டெல்லியில் நடந்த அதிர்ச்சி

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பிரபல தாதா கோகி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஜிதேந்தர் கோகி என்பவருடன் மேலும் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணைக்காக தாதா கோகி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கோகியின் எதிர்தரப்பான டெல்லி தரப்பினர், வக்கீல்கள் போல் உடை அணிந்து வந்து தாக்கினர்.

மேலும், இருதரப்பினருக்கிடையே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த கோர்ட் வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதே போன்று கடந்த ஏப்ரல் மாதம் இதே வளாகத்தில் 38 வயது வாலிபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

பதிவு: January 01, 1970
டெல்லி நீதிமன்றம், ரடிவு, சுட்டுக்கொலை, Delhi court, raid, shooting
வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியது!- புதிய உச்சத்தில் மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 273 புள்ளிகள் உயர்ந்து 60,158 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

நேற்று பங்குச் சந்தை முடிவின்போதே சென்செக்ஸ் 59,885 புள்ளிகளில் இருந்தது. மேலும், நிப்டி 17,883 புள்ளிகளில் இருந்தது. இன்று பங்கு வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டும் என முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

எதிர்பார்த்ததை போலவே இன்று சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை தாண்டியுள்ளது. தற்சமயம் சென்செக்ஸ் 60,214.68 புள்ளிகளாக உள்ளது. நிப்டி தற்போது 17,900 புள்ளிகளுக்கு மேல் உள்ளது.

சென்செக்ஸில் இன்ஃபோசிஸ், எச்டிஎல் டெக், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், டெக் மகிந்த்ரா ஆகிய பங்குகள் அதிகபட்சமாக முன்னேறியுள்ளன. டாடா ஸ்டீல், இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி, மகிந்த்ரா ஆகிய பங்குகள் சரிந்துள்ளன.

அமெரிக்க ஃபிடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நேற்று அமெரிக்க மார்க்கெட்டுகள் 1 விழுக்காடுக்கு மேல் உயர்ந்தன. மேலும், பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து வருகிறார்.

இதுபோக, கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதும், தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், அன்லாக் மனநிலை உருவாகியுள்ளதும் பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

பதிவு: January 01, 1970
மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை, சென்செக்ஸ், நிப்டி, Mumbai Stock Exchange, National Stock Exchange, Sensex, Nifty
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்!- நிபுணர் குழு அமைக்கிறது உச்சநீதிமன்றம்

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான அமளியில் ஈடுபட்டன.

இந்த குற்றசாட்டு தொடர்பாக விளக்கமளித்துள்ள ஒன்றிய அரசு, தற்போது எழுந்துள்ள குற்றசாட்டு அரசின் நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேசமயம், பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் சார்பில் பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யுங்கள் என 2 முறை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டும் ஒன்றிய அரசு அதனை செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நிபுணர் குழு தொடர்பாக அடுத்த வாரம் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார்.

பதிவு: January 01, 1970
பெகாசஸ், உச்சநீதிமன்றம், மத்திய அரசு, Pegasus, Supreme Court, Central Government
கோயிலுக்குள் சென்று வழிபட்ட குழந்தை... பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதித்த ஊர் மக்கள்... கர்நாடகாவில் அதிர்ச்சி

தனது பிறந்த நாளை ஒட்டி, குழந்தை ஒன்று கோயிலுக்குள் சென்றதால் பட்டியலின பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கோப்பல் மாவட்டத்தில் உள்ள ஹனுமசாகர் அருகில் உள்ளது மியபுரா கிராமம். இந்தப் பகுதியை சேர்ந்த ஒருவரின் 2 வயது குழந்தைக்கு கடந்த 4ம் தேதி பிறந்த நாள் . இதையடுத்து அருகில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று வழிபட்டனர் பெற்றோர். பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்கு செல்ல அந்த கிராமத்தினர் தடை விதித்துள்ளனர். இதையடுத்து கோயிலின் வெளியே நின்று அவர்கள் வழிபட்டனர்.

அப்போது. குழந்தை திடீரென கோயிலுக்குள் ஓடி, சாமி கும்பிவிட்டு திரும்பியது. இதைக் கண்ட அந்தப் பகுதியினர் பட்டியலின குழந்தை எப்படி கோயிலுக்குள் செல்லலாம்? என பிரச்னையாக்கினர். இதையடுத்து அந்த கிராமத்தினர் கூடி பேசி, கோயிலுக்குள் குழந்தை சென்றதற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விட்டதாகவும் அதற்கான பூஜைக்காக இந்த தொகையை அபராதமாக விதிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியே தெரிய வந்ததை அடுத்து மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் மியபுரா கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் கிராமத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி கோப்பல் நகர போலீஸ் எஸ்.பி டி.ஸ்ரீதர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று விசாரித்தோம். மக்களுக்கு அறிவுரை செய்தோம். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து, குழந்தையின் குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கேட்டனர்" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பதிவு: January 01, 1970
கர்நாடகா, கோயில், குழந்தை, பட்டியலின பெற்றோர், அபராதம், Karnataka, temple, child, parent, fine
நள்ளிரவில் வெடி மருந்துடன் வெடித்து சிதறிய கார்!- சாத்தான்குளம் அருகே அதிர்ச்சி

சாத்தான்குளம் அருகே வெடி தயாரிக்கும் மருந்துகள் இருந்த கார் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் நெல்லை மாவட்டம் அணைக்கரை பகுதியில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு பாலகிருஷ்ணன் தனது காரில் பயங்கர வெடி பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் இரவு நேரத்தில் அவரது காரிலிருந்து அலாரம் அடித்துள்ளது. இதனால் பாலகிருஷ்ணன் தனது காரில் உள்ள ரிமோட் மூலம் காரை லாக் செய்துள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது காரில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. மீண்டும் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் கார் வெடித்து சிதறியுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்துடன் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது காரின் பாகங்கள் அனைத்தும் தனித்தனியாக ஊர் முழுவதும் வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது.

பட்டாசு தயாரிக்கும் வெடிமருந்தை சட்டவிரோதமாக காரில் ஏற்றி வந்தது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். நள்ளிரவு நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் உயிர்சேதம் அனைத்தும் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
சாத்தான்குளம், வெடி மருந்து, கார் விபத்து, Sattankulam, explosives, car accident
குறைந்து வருகிறது விலை!- தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் மக்களே!

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் பலர் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. நேற்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,369 ஆக இருந்தது. நேற்றைய முன்தினம் இதன் விலை 4,371 ரூபாயாக இருந்தது. அதேபோல, 34,968 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 16 ரூபாய் குறைந்து 34,968 ரூபாய்க்கு வந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.34,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,355க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசு குறைந்து ரூ.63.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை அதிரடி குறைவால் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதனை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பதிவு: January 01, 1970
தங்கம், வெள்ளி, சென்னை, பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், Gold, Silver, Chennai, Public, Customers
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like