Today is Saturday 2021 Dec 04
விளையாட்டு
சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டியில் வெற்றி!- முதல்வரிடம் வாழ்த்து பெற்ற வீரர்கள்

உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.


சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி-2021 இம்மாதம் உகாண்டா நாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில் தமிழக வீரர்கள் 9 பேர் இடம் பெற்றனர். இந்தப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் மட்டும் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகள் ருத்திக், தினகரன், சிவராஜன், கரண், அமுதா, சந்தியா, பிரேம் குமார், சீனிவாசன் நீரஜ், போட்டிகளில் பங்கேற்ற வீரர் தினேஷ், பயிற்சியாளர்கள் பத்ரிநாராயணன், இர்பான் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.

இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி்வ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினர் செயலர் டாக்டர் ஆனந்தகுமார், பாரா பாட்மிண்டன் சங்கத் தலைவர் அசோக், துணைத் தலைவர் சத்யநாராயணன், துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

பதிவு: November 24, 2021
சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி, முதல்வர் ஸ்டாலின், பாட்மிண்டன் வீரர்கள், International Para Badminton Tournament, Chief Stalin, Badminton Players
2வது முறையாக தமிழ்நாடு அணி சாம்பியன்!- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சையது முஸ்தாக் அலி டி20 கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சையது முஸ்தாக் அலி என்னும் மாநில அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் பல கட்டப் போராட்டத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் விஜய் சங்கர் தலைமயிலான தமிழ்நாடு அணியும், மனீஸ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியும் நுழைந்தன.

நேற்று (22-ம் தேதி) நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை விட்டுக் கொடுத்து 153 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்று, தொடரை இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது. இறுதிப் பந்தில் வெற்றி பெறத் தேவையான ரன்களைச் சேர்த்த தமிழக வீரர் ஷாருக்கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றிய தமிழ்நாடு அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், "SyedMushtaqAliTrophy-இல் தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்! ஷாருக்கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான - துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!" என தெரிவித்துள்ளார்.

பதிவு: November 23, 2021
தமிழ்நாடு அணி, முதல்வர் ஸ்டாலின், சையது முஸ்தாக் அலி, Syed MushtaqAli Trophy
வீரர் மாரியப்பனுக்கு அரசுப் பணி!- ஆணையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாராலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை ஒதுக்கி அதற்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுவுக்குத் துணை மேலாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் இந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, தனது வெள்ளிப் பதக்கத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்றார் மாரியப்பன். அப்போது அவர், "டோக்கியோ பாராலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் வென்றதில் சிறிது வருத்தம் உள்ளது. எனக்கு அரசுப் பணி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு அரசுப் பணி ஒதுக்கி அதற்கான பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

பதிவு: November 03, 2021
பாராஒலிம்பிக், மாரியப்பன் தங்கவேலு, அரசு வேலை, முதல்வர் ஸ்டாலின், Paralympic, Mariappan Thangavelu, Government job, Chief Minister Stalin
ஜாதி ரீதியாக சர்ச்சை பேச்சு!- முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திடீர் கைது

ஜாதி ரீதியாக அவதூறு கருத்தை தொடரப்பட்ட வழக்கில் திடீரென முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார். சில மணி நேரங்களில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.


கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா உடன், யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராம் லைவ்வில் உரையாடினார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் சாஹல் வெளியிட்ட டிக் டாக் வீடியோ குறித்து யுவராஜ் சிங் சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்தார். அதில்  சாஹலின் ஜாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக யுவராஜ் கூறிய அந்த வார்த்தை, குறிப்பிட்ட சமூக மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அவரின் அந்தப் பேச்சுக்கு சமூகவலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜான்சியில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தனது பேச்சுக்காக யுவராஜ் சிங் அப்போதே மன்னிப்பும் கூறினார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ராஜட் கல்சான் என்பவரின் சட்ட போராட்டத்தால் இந்த வழக்கில் ஹரியானா மாநிலம் ஹன்சி காவல்துறையினர் தற்போது எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யுவராஜ் சிங்கை கைது செய்தனர். அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அச்சமயம், தாம் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மன்னிப்பு கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார். தொடர்ந்து, நீதிமன்றத்தில் இடைக்கால பிணை பெற்றதால் யுவராஜ் சிங் உடனடியாக விடுவிக்கப்பட்டார்.

பதிவு: October 18, 2021
இந்திய கிரிக்கெட் வீரர், யுவராஜ் சிங், அரியானா போலீஸ், Indian cricketer, Yuvraj Singh, Haryana Police
கொரோனா பாதிப்பு இல்லை!- தமிழக வீரர் மாரியப்பன் குவாரண்டையன்

கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்யோவில் இன்று தொடங்குகிறது. மாற்று திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி டோக்யோவில் இன்று முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்று திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது.

ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியை போல் பாராலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டோக்கயோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்திய அணிக்கு தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கொரோனா பாதித்த வெளிநாட்டு பயணி ஒருவருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், தமிழக வீரர் மாரியப்பன் ஒலிம்பிக் கிராமத்திற்கு வந்த உடன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இருப்பினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக தேக் சந்த் ஏந்துவாா் என கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து வினோத் குமார் (வட்டு எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து செல்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கின்றனர்.

பதிவு: August 24, 2021
தமிழக வீரர் மாரியப்பன், கொரோனா, பாராலிம்பிக் போட்டி, Tamil Nadu player Mariappan, Corona, Paralympic competition
ராகுலின் சதத்தால் நிமிர்ந்தது இந்தியா!- இங்கிலாந்து அணி திணறல்

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலின் சதத்தால் இந்திய அணி முதல் இன் னிங்ஸில் 364 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்ததை அடுத்து 2 வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பேட்டிங்கை தொடங்கிய கே.எல்.ராகுலும் ரோகித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ரோகித் சர்மா 83 ரன்களும் கே.எல்.ராகுல் 129 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராத் கோலி 42 ரன்களும் கடைசியில் அதிரடி காட்டிய ஜடேஜா 40 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். 29 ஓவர்களில் 7 மெய்டனுடன் 62 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் சாய்ப்பது அவருக்கு 31-வது முறை. ஆண்டர்சனின் வயது 39. இதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய மூத்த வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் ரோரி பர்ன்ஸ் (49 ரன்), விக்கெட்டை முகமது ஷமியும் டோம் சிப்லே (11ரன்), ஹசீப் ஹமீத் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை முகமது சிராஜும் வீழ்த்தினர்.

இதையடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட்டும் (48 ரன்), பேர்ஸ்டோவும் (6 ரன்) களத்தில் உள்ளனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்குகிறது.

பதிவு: August 14, 2021
இந்தியா, இங்கிலாந்து, ராகுல், லண்டன் லார்ட்ஸ், 2வது டெஸ்ட், 2nd Test, Lord, India, England
அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...
You May Like