
இந்தியாவில் இந்தாண்டு மட்டும் 126 புலிகள் உயிரிழந்திருப்பதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
2021ம் ஆண்டு டிசம்பர் 29 வரையிலான புள்ளி விவரங்களை புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி 126 புலிகளில் 60 புலிகள் வேட்டைக்காரர்களாலும், மக்களின் தாக்குதல் காரணமாகவும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 526 புலிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில் அதிகளவாக 41 புலிகளும், 312 புலிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 25 புலிகளும் இந்தாண்டு உயிரிழந்துள்ளன.
524 புலிகளை கொண்ட கர்நாடகாவில் 15 புலிகளும், 173 புலிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 9 புலிகளும் உயிரிழந்துள்ளன. 2012ம் ஆண்டு முதல் புலிகள் உயிரிழப்பு விவரங்கள் வெளியிடப்படும் நிலையில் 2016ம் ஆண்டு அதிக அளவாக 121 புலிகள் இறந்திருந்தன. எனவே கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஆண்டு தான் அதிக அளவாக 126 புலிகள் உயிரிழந்திருப்பது கவலை தரும் தகவலாகும். அடர்ந்த வனப்பகுதிக்குள் மேலும் பல புலிகள் இறந்திருக்க கூடும் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக வனஉயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.