புதன்கிழமை, மே 05, 2021
இந்தியா, இலங்கை, டி20 கிரிக்கெட் போட்டி, 3rd T20I, India, Sri Lanka
பதிவு: 2021-07-30 11:42:48

இலங்கைக்கு எதிரான கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வந்தது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தொடரை வென்ற இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, 2 வது போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம அளவில் இருந்தன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நேற்றிரவு நடந்தது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய வீரர்கள், இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் ஓவரிலேயே கேப்டன் ஷிகர் தவான் ரன் ஏதும் எடுக்காமலும் தேவ்தத் படிக்கல் 9 ரன்னுடன், ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் (0), ருதுராஜ் கெய்க்வாட் (14 ரன்), நிதிஷ் ராணா (6 ரன்) ஆகியோர் வரிசையாக விக்கெட்டை இழந்தனர். தொடர்ந்து வந்த புவனேஸ்வர் குமாரும் (16 ரன்), குல்தீப் யாதவும் (23 ரன், நாட்-அவுட்) கொஞ்சம் ரன்கள் சேர்த்ததால், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 81 ரன் எடுத்தது.

சர்வதேச டி-20 போட்டியில், இந்திய அணியின் 3-வது குறைந்தபட்ச ஸ்கோர் இது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் களமிறங்கிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியாவுக்கு எதிராக, டி-20 தொடரை இலங்கை அணி வெல்வது இதுவே முதல் முறை.