புதன்கிழமை, மே 05, 2021
மருத்துவர் சுப்பையா கொலை, சென்னை நீதிமன்றம், Doctor Subbaiah murder, Chennai court
பதிவு: 2021-08-04 14:55:48

பிரபல மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்குத் தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா, கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக, ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப் படையைச் சேர்ந்த ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில், ஐயப்பன் அப்ரூவராக மாறினார். கடந்த 8 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின், தீர்ப்பை ஆகஸ்ட் 2ம் தேதி அறிவிப்பதாக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், பொன்னுசாமி, மரியபுஷ்பம், பஷில், போரீஸ், வில்லியம், யேசுராஜா, டாக்டர் ஜேம்ஸ் சதீஷ்குமார், முருகன், செல்வ பிரகாஷ் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனிடையே, தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் கொலைக்கு உடந்தையாக இருந்தாக கூறி ஆசிரியர் மேரி புஷ்பம், கூலிப் படையைச் சேர்ந்த ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அப்ரூவராக மாறிய  ஐயப்பன் என்பவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை.