புதன்கிழமை, மே 05, 2021
ஆப்கானிஸ்தான், வங்கிகள், தலிபான்கள், பொதுமக்கள், Afghanistan, Kabul banks, Taliban, people
பதிவு: 2021-08-26 13:08:58

ஆப்கானிஸ்தானில் 10 நாட்களாக மூடப்பட்டிருந்த வங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பணம் எடுக்க வங்கிகளில் மக்கள் குவிந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதையடுத்து அந்நாட்டை கடந்த 15-ம் தேதி தலிபான்கள் கைப்பற்றியுள்ளன. ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய அந்நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. இதனால், பொதுமக்கள் தங்கள் கைகளில் பணம் இல்லாமல் மிகுந்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் 10 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வங்கிகள் திறக்கப்பட்டதால் தங்கள் கணக்குகளில் சேமிப்பில் உள்ள பணத்தை எடுக்கும் நோக்கத்தோடு நூற்றுக்கணக்கானோர் வங்கி முன் குவிந்தனர்.

தலைநகர் காபூலில் வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் தங்கள் சேமிப்பு பணத்தை எடுக்க மக்கள் குவிந்தனர். இதனால், வங்கி முன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும், வங்கிகளில் போதிய கையிருப்பு பணம் இல்லாததால் பணம் எடுக்க வந்தவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி அமெரிக்காவின் மத்திய வங்கியில் சேமித்து வைத்துள்ள 7 பில்லியன் டாலர்கள் தங்கம், பணத்தை அமெரிக்க அரசு முடக்கி வைத்துள்ளது. அதேபோல், ஆப்கானிஸ்தான் அரசுக்கு இந்த வாரம் ஒதுக்கப்படவேண்டிய 460 மில்லியன் டாலர்கள் பணத்தை சர்வதேச நிதியம் நிறுத்தி வைத்துள்ளது . இதனால், ஆப்கானிஸ்தானில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.