Today is Sunday 2021 Dec 05
மத்திய குழு, தமிழ்நாடு, மழை, சென்னை, கன்னியாகுமரி, Central Committee, Tamil Nadu, Rain, Chennai, Kanyakumari
பதிவு: 2021-11-22 12:00:51

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பு மத்திய குழு நேரில் நேரில் ஆய்வு செய்து வருகிறது. இரு குழுக்களாக சென்று பணியை தொடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியது.

இதேபோல விழுப்புரம், கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்பட பல மாவட்டங்களிலும் அதிக மழை பெய்தது. கன மழையால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மூழ்கின. இந்த பாதிப்புகளை தொடந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மழை சேதங்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டு இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக கன மழையால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடுவதற்கு மத்திய குழுவினை அனுப்பி வைக்கவேண்டும் என்றும், முதல் கட்ட வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 79 கோடி வழங்கவேண்டும் என்றும், இதில் ரூ.550 கோடியை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும் மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதன்பேரில் மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில், மத்திய நிதித்துறை செலவின பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், மத்திய வேளாண்மைத்துறை (ஐ.டி.) பிரிவு இயக்குனர் விஜய் ராஜ்மோகன், மத்திய நீர்வள அமைச்சகத்தின் இயக்குனர் ஆர்.தங்கமணி, மத்திய எரிசக்தித்துறை உதவி இயக்குனர் பாவ்யா பாண்டே, சென்னையில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மண்டல அதிகாரி ரணஞ்செய் சிங், மத்திய ஊரக வளர்ச்சித்துறை சார்பு செயலர் எம்.வி.என்.வரப்பிரசாத் ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ராஜீவ் சர்மா தலைமையிலான மத்திய குழுவினர் நேற்று பிற்பகல் சென்னை வந்தனர். அந்த குழுவினர் மாலை 3.30 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாகவும், சென்னையிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் போன்ற புள்ளி விவரங்கள் அடங்கிய விளக்கக்காட்சிகள் மூலம் தகவல்களை மத்திய குழுவினருக்கு, தமிழக அதிகாரிகள் எடுத்து கூறினார். இந்த கூட்டத்தில் 12-க்கும் மேற்பட்ட துறைகளின் முதன்மைச்செயலாளர்கள் கலந்து கொண்டு மழையால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான தகவல்களை அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மழை வெள்ள சேதங்கள் மற்றும் பாதிப்புகளை இரு குழுக்கமாக பிரிந்து இன்று மற்றும் நாளை ஆய்வு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்தநிலையில், சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு இன்று காலை ஆய்வு செய்ய தொடங்கினார். முதல் பகுதியாக புளியந்தோப்பு வீரப்ப செட்டி தெரு, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, அழகப்பா சாலை, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சிவா இளங்கோ சாலை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து 1 மணி வரை உள்துறை அமைச்சக இணைச் செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையில் முதல் குழுவினர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் (வரதராஜபுரம்) ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர். அதன் தொடர்ச்சியாக நாளை கடலூர், டெல்டா மாவடங்களில் நேரில் சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்கின்றனர். அதேபோன்று பாண்டிச்சேரிக்கும் சென்று வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்யவும் உள்ளனர்.

ஆய்வு பணிகளை முடித்த பின்னர் வரும் 24ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றர். அப்போது வெள்ள பாதிப்பு குறித்து நடத்தி ஆய்வு குறித்து ஆலேசனை நடத்துகின்றனர். அதன்பின்னர் மத்திய குழுவானது டெல்லி செல்கின்றது. அங்கு பாதிப்புகள் குறித்த அளிக்கையை மத்திய அரசிடம் அளிக்க திட்டமிட்டுள்ளது. அதன் பின்னர் மத்திய அரசு முதல்கட்ட வெள்ள நிவாரண நிதியை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...