புதன்கிழமை, மே 05, 2021
நீட் தேர்வு, மாணவர்கள், ஈபிஎஸ், ஸ்டாலின், தமிழக அரசு, Neet Exam, Students, EPS, Stalin, TamilNadu Government
பதிவு: 2021-09-13 12:46:48

நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அதிமுக தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நீட்’ தேர்வு பிரச்னை தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய வினாவிற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலில், "நீட் தேர்வைத் தடுத்து நிறுத்தி, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை மருத்துவக் கல்வியில் சேர்த்தவர் கலைஞர். ஏன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாகூட நீட் தேர்வை நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய இவர் (ஈபிஎஸ்), முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது. ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’ என்று இதே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதும், எதிர்க்கட்சித் தலைவரான இவர், முதலமைச்சராக இருந்தபோதுதான்.

நீட் தேர்வு அச்சத்தில், அனிதா உள்பட மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது உங்கள் ஆட்சியில்தான். குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நீட் மசோதாவை இந்த அவைக்குச் சொல்லாமல் மறைத்ததும் அ.தி.மு.க. ஆட்சிதான். அதாவது, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதுதான். இப்போது உயிரிழந்த மாணவர் தனுஷ் இருமுறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததும் நீங்கள், அதாவது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான். ஒன்றிய அரசுடன் கூட்டணியாக இருந்தீர்கள். இப்போதும் இருக்கிறீர்கள். சி.ஏ.ஏ. மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக ஓட்டுப் போட வேண்டும் என்ற நிலை வந்தபோது, பா.ஜ.க. கூறியபோது, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க. நிபந்தனை விதித்து இருக்கலாம். அந்தத் தெம்பு, திராணி அ.தி.மு.க.-விற்கு இல்லை.

அதைச் செய்திருந்தால், நீட் தேர்வுக்கு ஓரளவிற்கு விலக்கு கிடைத்திருக்கும். ஆனால் நீட் தேர்வால் மாணவச் செல்வங்கள் மடிந்தபோது மரண அமைதி காத்து, ஆட்சி நடத்தியதுதான் அ.தி.மு.க. ஆனால், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். சட்ட மசோதாவை இன்று நான் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். ஆகவே, நீட் தேர்வை ரத்து செய்து, 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் மாணவர்களை சேர்க்க இந்த அரசு அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன குற்றச்சாட்டிற்கு பதிலாக சொல்லி அமைகிறேன்" என்றார்.