புதன்கிழமை, மே 05, 2021
பத்திரிகையாளர்கள், தமிழக அரசு, பத்திரிகையாளர் நலவாரியம், Journalists, TamilNadu Government, Press Welfare Board
பதிவு: 2021-09-07 14:22:26

பத்திரிகையாளர் நலவாரியம், பத்திரிகையாளர் மரணம் அடைந்தால் அவரது குடும்பத்துக்கு நிவாரண உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் அறிவிப்புகள் வெளியிட்டார். அதில், "பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும். பணிக் காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்ப நிவாரண நிதி 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.

பத்திரிகையாளர்கள் மொழி திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க, பயிற்சி பெற அரசு நிதியுதவி வழங்கப்படும். சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அரசின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில் சமூக ஊடகப் பிரிவு என்ற தனிப் பிரிவு உருவாக்கப்படும்.

அரசு விளம்பரங்கள் வெளியிடும் பணிகள் அனைத்தும் இணையம் வழியாக மேற்கொள்ள மென்பொருள் உருவாக்கவும் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மைய அச்சகம் மற்றும் கிளை அச்சக கட்டடங்கள் புனரமைக்கப்படும். சென்னை, அரசு கலை அச்சகத்திற்கு சுமையூர்தி ஒன்று கொள்முதல் செய்யப்படும். சென்னை அரசு கலை அச்சகத்திற்கு ஒரு காகிதம் சிப்பம் கட்டும் இயந்திரம் கொள்முதல் செய்யப்படும்" கூறப்பட்டுள்ளது.