Today is Sunday 2021 Dec 05
மாடு, கோமாரி தடுப்பூசி, தமிழக அரசு, Cow, syphilis vaccine, Tamil Nadu Government
பதிவு: 2021-11-25 17:50:35

தமிழகத்தில் மாடுகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழகத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 2011 -ம் ஆண்டு முதல் 2019 -ம் ஆண்டுவரை மத்திய – மாநில அரசு நிதி உதவியுடன் கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு இரண்டு சுற்றுகள் வீதம் மொத்தம் 17 சுற்றுகளாக ஆறு மாதம் இடைவெளியில் தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது.

2020 -ம் ஆண்டு முதல் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசால் நூறு சதவீதம் மானியத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. 2020 -ம் ஆண்டில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி செப்டம்பர்-2020ல் முடிவடைந்து மொத்தம் 87.03 லட்சம் மாட்டினங்கள் பயனடைந்தன.

2021-ம் ஆண்டில் இரண்டாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணிக்கு தேவைப்படும் 90.00 லட்சம் தடுப்பூசி அலகுகள் வழங்கிட ஒன்றிய அரசிடம் கோரப்பட்டுள்ளது. எனினும் ஒன்றிய அரசால் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவ நிலையங்களிலுள்ள குளிப்பதன அறையில் பாதுகாக்கப்பட்ட கையிருப்பு கோமாரி நோய் தடுப்பூசி மருந்தினை கொண்டு நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையோர தமிழக மாவட்டங்களான ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் மாட்டினங்களில் சுமார் 2.69 லட்சம் தடுப்பூசி செப்டம்பர்-2021-ல் போடப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசிப்பணி நூறு சதவீதம் நிறைவடைந்துள்ளது.

தற்போது 28.85 லட்சம் அளவில் கோமாரி நோய் தடுப்பூசி அக்டோபர்- 2021 மற்றும் நவம்பர்-2021 மாதங்களில் ஒன்றிய அரசிடமிருந்து பெறப்பட்டு ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை, தேனி, திருவாரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவநிலை காலங்களில் ஏற்படும் நோய் கிளர்ச்சி பகுதிகளில் கால்நடை மருத்துவ குழுக்கள் அமைத்து பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளித்தும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடைகளில் ஏற்படும் நோய் தொற்று,, நோய் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கால்நடைகளின் நலன் பாதுகாக்கப்பபடுகிறது. மேலும் தொற்றுநோய் மற்றும் மழை காலங்களில் கால்நடை நோய் புலணாய்வு பிரிவுகள் மூலம் தீவிர கண்காணிப்பு, கடுங்காணிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர்-2021 -ம் மாதம் தொடங்கி மொத்தம் 1457 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அம்முகாம்களில் 97,563 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், 1,48,209 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டும், 6,60,703 கால்நடைகளுக்கு இதர தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் 21,069 கிலோ தாதுஉப்புக்கலவை கால்நடை வளர்ப்போர்க்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் மூலமாகவும், நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி கொண்டும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி எண்.1962 கொண்டும், கால்நடை மருத்துவ குழுக்கள் மூலமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும், தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்களிலிருந்தும் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

விவசாய பெருமக்களிடம் கோமாரி நோய் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கண்ட முகாம்கள் தொடர்பான விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் பெருமளவில் விளம்பரங்கள் அனைத்து மாவட்டங்கள் முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. 24.11.2021 அன்று வரை மொத்தம் 21.05 லட்சம் மாட்டினங்களுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசிடம் மீதமுள்ள 61.15 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசி வழங்கக் கோரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலுள்ள கால்நடைகளுக்கும் கோமாரி தடுப்பூசிப் பணி நிறைவு செய்யும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, ஒன்றிய அரசிற்கு, கோமாரி தடுப்பூசி முழுமையாக வழங்கக் கோரி தமிழக அரசால் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை வளர்போரிடம் நோய் குறித்த விழிப்புணர்வு, சுகாதார முறையில் கொட்டகை மற்றும் கால்நடைகளை பராமரிக்கவும், நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் உரிய சிகிச்சை மேற்கொள்ளவும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தவும், அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...