புதன்கிழமை, மே 05, 2021
நடிகை மீரா மிதுன், சென்னை போலீஸ், Actress Meera Mithun, Chennai Police
பதிவு: 2021-09-03 16:29:20

போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்குத் தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிபதியிடம் கதறலுடன் கூறினார்.

நடிகையும், மாடலுமான மீரா மிதுன், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கடந்த மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பணியாற்றும் ஊழியரை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக, நடிகை மீரா மிதுன் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில், எழும்பூர் 14 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர் மாஜிஸ்திரேட் பாலசுப்பிரமணியன் முன் கதறினார். போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக அவர் கூறினார். எழும்பூர் போலீசார், இந்த வழக்குகள் குறித்து முறையாக தனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் குற்றம்சாட்டினார். பின்னர் சிறிது நேரம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா மிதுன் மீதான மொத்தமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஜாமீன் வழங்கப்படவில்லை.