Today is Sunday 2021 Dec 05
கொரோனா தடுப்பூசி, மாற்றுத் திறனாளிகள், அமைச்சர் சுப்பிரமணியன், Corona Vaccine, Minister Subramaniam
பதிவு: 2021-10-30 11:47:46

"தடுப்பூசி செலுத்துவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 7-வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தாமல் இருக்கிற 60 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகம் முழுவதும் இன்று 7-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் இதுவரை 29% பேர் 2 தவணை தடுப்பூசியும், 69% பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். இதுவரை தமிழகம் முழுவதும் 5,73,901 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்றே தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.

7வது தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறுகிறது. தற்போது 59 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மலை வாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. நவம்பர் மாதத்தில் மத்திய அரசிடம் இருந்து 1.40 கோடி தடுப்பூசிகள் வர உள்ளன" என்று கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை
ஆசிரியரின் தேர்வுகள்...