புதன்கிழமை, மே 05, 2021
ராஜேஷ் தாஸ், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பாலியல் புகார், பெண் எஸ்பி, Rajesh Das, High Court, Supreme Court, Sex Complaint, Female SP
பதிவு: 2021-08-18 15:03:11

தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க தடை விதித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தமிழக காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தன் மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், "இந்த வழக்கில் உரிய நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. தன் மீது குற்றச்சாட்டு பதிய வேண்டும் என்ற நோக்கிலேயே அனைவரும் செயல்படுகின்றனர். சில அரசு அதிகாரிகளே தனக்கு எதிராக இருக்கின்றனர். எனக்கு எதிரான வழக்கு விசாரணையை நான் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் இந்த வழக்கு தமிழகத்தில் நடைபெற்றால் நேர்மையாக இருக்காது. எனவே வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். முன்னரே பேசி வைத்தது போல் எனக்கு எதிராக அனைவரும் செயல்படுகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் காழ்புணர்ச்சியின் காரணமாக தன்னுடன் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளே தனக்கு எதிராக செயல்படுகின்றனர். இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் தனக்கு எந்தவொரு ஞாயமும் இந்த விஷயத்தில் கிடைக்காது" என கூறியிருந்தார்.

அதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், "குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிய சட்ட ரீதியிலான நியாயங்கள் கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதாவது யார் பாதிக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற விஷயத்தில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதேநேரத்தில் இவர் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளை மறுப்பதாகவும், சிறப்பு டிஜிபியின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்பது சாதாரணமானவை அல்ல. அது மிகவும் தீவிரமானது. விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது அதனை கீழமை நீதிமன்றம் விசாரிக்க கூடாது. இடைக்காலமாக தடை விதித்திருந்தீர்கள். அதனை கீழமை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. உயர் அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் போது இத்தகைய விவகாரங்கள் தினசரி விசாரிக்கப்பட்டு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் மக்களுக்கு நீதித்துறையின் மீதும் காவல்துறையின் மீதும் அரசின் மீதும் நம்பிக்கை ஏற்படும்" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

பிறகு மனுதாரர் சார்பாக வாதிடுகையில், சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தில் தானாக முன்வந்து கண்காணிப்பதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். இவையெல்லாம் இந்த வழக்கை மேலும் பூதாகரமாக ஆக்கக்கூடிய விஷயம். நான் ஒரு நேர்மை தவறாத ஒரு அதிகாரியாக இருந்திருக்கிறேன். எனவே சென்னை உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தை தானாக முன்வந்து கண்காணிப்பது என்பது சரியானது இல்லை என தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், "வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனுதாரருடைய கோரிக்கையை ஏற்க மறுத்ததுடன் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கண்காணிப்பை செய்யக்கூடிய அந்த முடிவை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளது. வழக்கு தமிழகத்தில் தான் நடைபெறும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளனர். அதேநேரத்தில் தேவையில்லாமல் வேறு பல விஷயங்கள் இந்த வழக்கில் நடைபெறுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதையும் அவர்கள் கூறியுள்ளனர். எனவே அடுத்த உத்தரவின் போது கீழமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை என்பது நீக்கப்படும் என்று தெரிகிறது.