Today is Saturday 2023 Apr 01
திருவண்ணாமலை, கார்த்திகை தீபம், பக்தர்கள், Thiruvannamalai, karthigai deepam, devotees
பதிவு: 2021-10-27 16:57:34

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு சேவைப்பணியாற்ற சேவார்த்திகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இதில் பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பல லட்சம் பேர் கலந்துகொண்டு தரிசித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்புத் திருப்பணிக்குழு சார்பில் தீபத்திருவிழாவில் கலந்துகொள்ளும் அடியார்களுக்கு கடந்த 38 ஆண்டுகளாக திருக்கோவிலை சுற்றியுள்ள 16 திருமண மண்டபங்களில், சுமார் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னம்பாலிப்பும், சுக்கு காபியும், நீர்மோரும் வழங்கி வருகிறார்கள்.

இந்த நிகழ்வில் பணியாற்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து தன்னார்வலர்கள் மேற்கண்ட மண்டபங்களில் தங்கியிருந்து சேவை செய்து வருகின்றனர். மேலும் நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீகுருமகா சந்நிதானம் மற்றும் செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீகுருமகா சந்நிதானம் அருளாசி வழங்குவார்கள்.

இந்தாண்டு எதிர்வரும் (கார்த்திகை மாதம் 3ம் தேதி) 19.11.2021 வெள்ளிக்கிழமையன்று தீபத்திருவிழாவும், திருப்பணிக்குழு சார்பில் 39-ம் ஆண்டாக அன்னம்பாலிப்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் தீபத்திருவிழாவிற்கு தேவைப்படும் மளிகைப்பொருட்களை நன்கொடையாகக் கொடுக்க விரும்பும் அன்பர்களும், அங்கு வருகைதரும் பக்தர்களுக்கு சேவைப்பணியாற்ற விருப்பமுள்ள சேவார்த்திகள், தன்னார்வலர்களும் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்புத் திருப்பணிக்குழு தலைமை நிர்வாகி சண்முகசுந்தரத்தை 98430 66767 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விழாவில் பங்குபெறலாம்.

தற்போதைய செய்திகள்
இந்திய செய்திகள்