`வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும்!'- பிரதமர் மோடி புகழாரம்

"வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது" என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளை பொறுத்த அளவில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ராணி லக்ஷ்மி பாய் மற்றும் ராணி வேலுநாச்சியார். இவர்களில் இந்தியாவின் முதல் சுதந்திர விடுதலை போராட்ட வீராங்கனையாக விளங்குபவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார்.
ஏனெனில் வடக்கில் புகழ்பெற்ற ராணி லக்ஷ்மி பாய் 18ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். ஆனால் அவருக்கு முன்னதாக 17ம் நூற்றாண்டிலேயே ஆங்கிலேயேயரை வீர தீரத்துடன் எதிர்த்தவர் ராணி வேலுநாச்சியார். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையான வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், ‘வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "வரலாற்றுக் காலம் தொட்டு இன்றுவரை பெண்கள் வீரத்தின் விளைநிலமாகவும், தேசத்தை வழிநடத்தும் வல்லமை உடையவர்களாகவுமே உள்ளனர். அப்படிப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களை அவரது பிறந்ததினத்தில் நினைவுகூர்வோம்" என்று கூறியுள்ளார்.