
உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழக வீரர், வீராங்கனைகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.
சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி-2021 இம்மாதம் உகாண்டா நாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்றதில் தமிழக வீரர்கள் 9 பேர் இடம் பெற்றனர். இந்தப் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் இந்திய வீரர்கள் 45 பதக்கங்களை வென்றனர். இதில் தமிழக வீரர், வீராங்கனைகள் மட்டும் 12 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழக வீரர், வீராங்கனைகள் ருத்திக், தினகரன், சிவராஜன், கரண், அமுதா, சந்தியா, பிரேம் குமார், சீனிவாசன் நீரஜ், போட்டிகளில் பங்கேற்ற வீரர் தினேஷ், பயிற்சியாளர்கள் பத்ரிநாராயணன், இர்பான் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
இந்த நிகழ்வின்போது, சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி்வ.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினர் செயலர் டாக்டர் ஆனந்தகுமார், பாரா பாட்மிண்டன் சங்கத் தலைவர் அசோக், துணைத் தலைவர் சத்யநாராயணன், துணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.